கோலாலம்பூர் – கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 3) அகால மரணமடைந்த எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான அக்கினியின் மறைவுக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும் வர்ணித்துள்ளது.
எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், தனது சகோதரர் போன்று 40 ஆண்டு கால நட்பு பாராட்டிய அக்கினியை இழந்தது துக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தார்.
“மலேசியாவில் தமிழ்ப் பத்திரிக்கை உலகமும், புதுக் கவிதைத் துறையும் ஒரு மிகப் பெரிய ஆளுமையை இழந்திருக்கிறது. இந்த இரு துறைகளிலும் தீவிரமாக இயங்கி வந்ததோடு, அந்தத் துறைகளை வளர்த்தெடுப்பதிலும் அக்கினி முக்கிய பங்காற்றினார். நமது நாட்டில் புதுக் கவிதையின் தோற்றம், வளர்ச்சி, சிறப்பு குறித்து வரலாறு எழுதப்பட்டால், அதில் அதில் அக்கினியின் பங்களிப்பும் கண்டிப்பாக இடம் பெறும்” எனவும் இராஜேந்திரன் (படம்) கூறினார்.
அக்கினியின் ‘கனா மகுடங்கள்’ புதுக்கவிதை நூல் அவரது இலக்கியப் பங்களிப்பு குறித்தும் அவரது கவிதாற்றலை எடுத்துக் காட்டும் விதமாகவும், மலேசிய இலக்கிய உலகில் நிலைத்து நிற்கும் என்றும் இராஜேந்திரன் தனது அறிக்கையில் புகழாரம் சூட்டினார்.
அவருக்குள் ஒரு போராளி இருந்தான் என்றும் கூறிய இராஜேந்திரன், உலகம் எங்கும் உள்ள மக்கள் போராட்டங்கள் குறித்து விரிவாகவும், தெளிவாகவும், மக்களுக்குப் புரியும் வண்ணமும் அவர் எழுதினார் என்றும் தெரிவித்தார்.
இலங்கைப் போராட்டங்கள் குறித்தும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பத்திரிகையாளராகச் சந்தித்தது குறித்தும் அவர் விரிவாக எழுதியிருக்கிறார் என்றும் குறிப்பிட்ட இராஜேந்திரன், பேச்சளவில் இல்லாமல் உண்மையிலேயே அக்கினியின் மறைவு மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் பேரிழப்பு என இரங்கல் தெரிவித்தார்.