Home One Line P2 இராதாபுரம்: வாக்கு எண்ணிக்கை முடிவினை அறிவிக்க அக்டோபர் 23 வரை இடைக்கால தடை!

இராதாபுரம்: வாக்கு எண்ணிக்கை முடிவினை அறிவிக்க அக்டோபர் 23 வரை இடைக்கால தடை!

1485
0
SHARE
Ad

சென்னை: கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் நெல்லை இராதாபுரம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் ஏற்பட்டதாக, திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட அப்பாவு தொடுத்திருந்த நீதிமன்ற வழக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) முடிவுக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையைத் தொடர்ந்து 203 தபால் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக வேட்பாளராக இன்பதுரை இத்தொகுதியில் போட்டியிட்டு 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 69,590 வாக்குகளும் அப்பாவு 69,541 வாக்குகளும் பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த வாக்கு எண்ணிக்கையில் தபால் ஓட்டுகளில் பல ஓட்டுகளைச் செல்லாது எனத் தேர்தல் அலுவலர்கள் அறிவித்ததாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

#TamilSchoolmychoice

இதற்கான வாக்கு இயந்திரங்களை  நெல்லையில் இருந்து பலத்த காவல் துறை பாதுகாப்புடன் இன்று வெள்ளிக்கிழமை காலை நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டன. தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, தேர்தலில் பதிவான 1508 தபால் வாக்குகள் மற்றும் 19, 20 மற்றும் 21-வது சுற்றுகளில் எண்ணப்பட்ட 34 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகள் இதில் அடங்கும்.

காலை 10.30 (இந்திய நேரப்படி) மணியளவில் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, அப்பாவு ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்தனர். காலை 11.30 மணிக்கு மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வந்தன. அதன் பின்னர் வாக்கு இந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதனிடையே, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. மறு வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு அவர் விண்ணபித்திருந்தார்.

இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், வாக்குகள் எண்ணப்படுவதை நிறுத்த முடியாது என்றும், அதே சமயம் இராதாபுரம் தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை முடிவினை வருகிற அக்டோபர் 23-ஆம் தேதி வரை வெளியிட முடியாது எனக் கூறி நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்துள்ளது.