ஷா அலாம்: நேற்று ஷா அலாமில் நடைபெற்ற மலாய் தன்மான காங்கிரஸ் கூட்டத்தில் எழுப்பப்பட்ட தீர்மானங்களில் ஆறு வருட காலப்பகுதியில் படிப்படியாக தேசிய வகை பள்ளிகள் அகற்றப்பட வேண்டும் என்பதும் அடங்கியது.
சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தின் (யுபிஎஸ்ஐ) பிரதிநிதி நூருல் பாடின் அகிலா ராகிம், சீன மற்றும் தமிழ் பள்ளிகளை அகற்றுவதன் மூலமாக நாட்டின் பல்லின மக்களின் ஒற்றுமைக்கு இது முக்கியமானதாக அமையும் என்று வலியுறுத்தினார்.
வருகிற 2026-ஆம் ஆண்டளவில் தேசிய வகை பள்ளிகள் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், நாட்டின் பல்வேறு இனங்களை ஒன்றிணைக்க தேசிய பள்ளிகள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தேசிய பள்ளிகள் ஆதரிக்கப்பட வேண்டும். ஏனென்றால் தேசிய வகை பள்ளிகள் மக்களை ஒன்றிணைக்க முடியாது. ஆறு ஆண்டுகளில் இப்பள்ளிகள் அகற்றப்பட வேண்டும், ஏனென்றால், ஒற்றுமைக்கு இது ஒரு முக்கியமான செயலாகும்” என்று அவர் தனது உரையில் கூறியிருந்தார்.