கோலாலம்பூர்: இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாதிக் ஒருபோதும் புட்பாண்டா நிறுவனத்தை புறக்கணிக்கும் திட்டம் குறித்து அமைச்சரவைக்கு அறிவிக்கவில்லை என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
எனவே, இந்த விவகாரத்தில் சைட் சாதிக்கின் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அவை அவரின் தனிப்பட்ட நிலைப்பாடு என்று அவர் கூறினார்.
“இது அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல. அவர் அந்த அறிக்கையை வெளியிடுவதற்கு ஒரு காரணம் இருக்கலாம்” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
புட்பாண்டா நிறுவனம் ஆணவமாக செயல்படுகிறது என்று வர்ணித்த அமைச்சர், அந்நிறுவனத்தை புறக்கணிக்க பொதுமக்களுக்கு அதிகாரம் இருப்பதாக நேற்று திங்கட்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.