Home One Line P1 மலேசிய மக்கள் நல்வாழ்வு வாழ ருக்குன் நெகாரா கோட்பாடு அவசியம் – வேதமூர்த்தி

மலேசிய மக்கள் நல்வாழ்வு வாழ ருக்குன் நெகாரா கோட்பாடு அவசியம் – வேதமூர்த்தி

1616
0
SHARE
Ad

புத்ராஜெயா – “நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ருக்குன் நெகாரா கோட்பாட்டையும் அதன்வழி ஒருமைப்பாட்டையும் பேரளவில் வளர்க்க வேண்டும். தங்களின் அறிவையும் சமூக வலைதளத்தையும் இதற்காக பெரிதும் பயன்படுத்த வேண்டும்” என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ருக்குன் நெகாரா தேசிய ஒற்றுமைச் செயலக கருத்துக்கள நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் ருக்குன் நெகாரா தேசிய செயலக பிரதிகள், உயர்க்கல்வி நிலையங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடையே பேசிய ஒற்றுமைத் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி, இன்றைய எல்லையற்ற உலகில் நாமெல்லாம் உறுதியான இன ஒற்றுமையைக் கடைப்பிடிக்கிறோம் என்றால் அதற்குக் காரணம், நம் முன்னோர்கள் அமைத்துள்ள அடித்தளம் அத்தகையது என்றார்.

‘ருக்குன் நெகாரா மனப்பாடம் செய்வதற்கு மட்டும் அல்ல’ என்னும் கருப்பொருளுடன் நடைபெற்ற இந்தக் கருத்துக்களம், மாணவர்கள் ருக்குன் நெகாராவைப் பற்றி இன்னும் அதிகமாக புரிந்து கொள்வதற்காக, குறிப்பாக ருக்குன் நெகாரா தேசிய செயலக உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது; ருக்குன் நெகாரா என்பது, மலேசியாவின் தேசிய அடையாளமாக வகுக்கப்பட்டுள்ளது என்றார்.

#TamilSchoolmychoice

தனியார் மற்றும் பொதுப் பல்கலைக்கழக மாணவர்களிடையே ஒருங்கிணைப்பு, ஆழமான அன்பு, நாட்டுப் பற்று போன்ற சிந்தனையை மேம்படுத்துவதற்காக கடந்த 2008-இல் ருக்குன் நெகாரா செயலகம் தோற்றுவிக்கப்பட்டது. அதுமுதல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், மெட்ரிகுலேஷன் கல்லூரிகள், சமூகக் கல்லூரிகள், போலிடெக்னிக் பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த உயர்க்கல்வி மாணவர்களுக்காக ஏராளமான நிகழ்ச்சிகளை ருக்குன் நெகாரா செயலகம் நடத்தியுள்ளது. தொடர்ந்து கல்விமான்கள் மற்றும் மாணவத் தலைவர்களிடையே கருத்துப்பரிமாற்றம் செய்வதற்கு இந்தத் தளம் பொருத்தமானது என்றார் அமைச்சர்.

எது எவ்வாறாயினும், நாட்டு மக்களிடையே பிணைப்பையும் இணக்கத்தையும் ஏற்படுத்த வல்லது ருக்குன் நெகாரா கோட்பாடு. நாட்டில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்கள் இளைஞர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தினாலும் எல்லாவற்றையும் கடந்து இளைய சமுதாயத்தை ஒன்றிணைக்கும் ஆற்றல் பெற்றது ருக்குன் நெகாரா.

பிரதமர் துன் மகாதீர் வகுத்துள்ள “2030 புதிய தூர நோக்கு இலக்கி’ன்வழி நாட்டின் வளப்பத்திலும் முன்னேற்றத்திலும் அனைத்து மக்களும் பங்கு கொண்டு அனைவரும் சக வாழ்வு வாழும் நிலையை எட்ட வேண்டுமெனில், ருக்குன் நெகாரா சிந்தனையை நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வேதமூர்த்தி மேலும் சொன்னார்.