Home அரசியல் ஆட்சிக்கு வந்தால் மகாதீர் மகனின் பெட்ரோனாஸ் குத்தகைகளை நிறுத்துவேன் – அன்வார் அறிவிப்பு

ஆட்சிக்கு வந்தால் மகாதீர் மகனின் பெட்ரோனாஸ் குத்தகைகளை நிறுத்துவேன் – அன்வார் அறிவிப்பு

503
0
SHARE
Ad

Mokhzani-Mahathir-Sliderஏப்ரல் 6 – “ மக்கள் கூட்டணி 13வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், முதல் வேலையாக முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் மகன் மொக்சானி மகாதீருக்கு (படம்) வழங்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரிங்கிட் மதிப்புடைய குத்தகைகளை நாங்கள் ரத்து செய்வோம்” என எதிர்க் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் முழக்கமிட்டுள்ளார்.

ஏப்ரல் 4ஆம் தேதி பேராக் மாநிலத்தின் கிரிக் வட்டாரத்தில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய அன்வார் “நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 24 மணி நேரத்திற்குள் முதல் வேலையாக பெட்ரோல் விலையைக் குறைப்போம். அதன் பின்னர், மகாதீரின் மகன் மொக்சானி மகாதீருக்கு வழங்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரிங்கிட் மதிப்புடைய குத்தகைகளை ரத்து செய்து, வேண்டியவர்களுக்கு மட்டும் சலுகை காட்டும் கலாச்சாரத்திற்கு முற்றுப் புள்ளி வைப்போம்” என்று கூறினார்.

மகாதீரும் அவருக்கு வேண்டியவர்களும் நாட்டின் சொத்துடமையான எண்ணெய் வளத்தை சூறையாடுவதிலிருந்து காப்பாற்றுவதோடு, நாட்டின் எண்ணெய் வளச் செல்வங்களின் பயன்கள்  அனைத்து மலேசியர்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்வோம் என்றும் அன்வார் உறுதியளித்தார்.

#TamilSchoolmychoice

“மகாதீரைப் பார்த்து பிரதமர் நஜிப் பயப்படுகின்றார். அவரால் மகாதீருக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. ஆனால் நான் அன்வார் இப்ராகிம். மகாதீருக்கு பயப்படுபவனல்ல. மகாதீரைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் குரூரமான எண்ணத்தோடு ஈடுபட மாட்டேன். ஆனால் அதே சமயம் அவரது மகனுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை முறையில் வழங்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரிங்கிட் மதிப்புடைய குத்தகைகளை ரத்து செய்து, அதன் பயன்கள் எல்லா மலேசியக் குழந்தைகளுக்கும் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுப்பேன்” என்றும் அன்வார் முழங்கினார்.

மொக்சானியின் பெட்ரோனாஸ் குத்தகை

மகாதீரின் மகன் மொக்சானி “சபுரா கெஞ்சானா பெட்ரோலியம் பெர்ஹாட்” என்ற நிறுவனத்தின் உதவித் தலைவரும், பகுதி உரிமையாளரும் ஆவார்.

இந்த நிறுவனத்திற்கு பெட்ரோனாஸ் அண்மையில்  836 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள குத்தகையொன்றை வழங்கியுள்ளது.

11.85 பில்லியன் சொத்துக்களை உடைய சபுரா கெஞ்சானா நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் உலகிலேயே பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும்.

துன் மகாதீர் பெட்ரோனாஸ் நிறுவனத்தின் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.