Home 13வது பொதுத் தேர்தல் பழனிவேல் மீது சாமிவேலு காட்டம் – “நான் தொகுதி கேட்டேனா?”

பழனிவேல் மீது சாமிவேலு காட்டம் – “நான் தொகுதி கேட்டேனா?”

994
0
SHARE
Ad

Samy-vellu-Featureஏப்ரல் 6 – சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியின் தேசிய முன்னணி தலைவராக முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு நியமிக்கப்பட்டது அந்த தொகுதியை மீண்டும் தேசிய முன்னணி மீட்டெடுக்க உதவும் என்ற கருத்துக்கள் முதலில் பரவத் தொடங்கின.

ஆனால், இப்போதோ, சாமிவேலுவின் சுங்கை சிப்புட் வருகை, ம.இ.காவின் உட்கட்சிப் போராட்டமாக உருமாறி வெடிக்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

சுங்கை சிப்புட் தொகுதியில் தன்னை மீண்டும் போட்டியிட சொல்லி வாக்காளர்கள் கேட்கின்றார்கள் என்றும் அவ்வாறு நின்றால் தான் வெல்லக் கூடிய ஒரு வேட்பாளர் என்றும் சாமிவேலு கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து நேற்று ம.இ.கா.தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் “வெல்லக்கூடிய வேட்பாளரோ இல்லையோ, சாமிவேலுவுக்கு இந்த தேர்தலில் தொகுதி கிடையாது” என்று கூறியிருந்தார்.

இதற்கு விளக்கமளித்த சாமிவேலு “எந்த காலத்திலும் நான் ம.இ.காவிடமும் அதன் தலைவர் பழனிவேலுவிடமும் தொகுதி வேண்டும் என்று கேட்டது கிடையாது. அவர்கள் எனது அறிக்கையைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள்” என காட்டமாக கூறியிருக்கின்றார்.

“டாக்டர் சுப்ராவும் எனது அறிக்கையைப் புரிந்து கொள்ளவில்லை”

“பழனிவேலுவோடு, ம.இ.கா துணைத் தலைவர் டாக்டர் சுப்ராவும் எனது அறிக்கையைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். ஒரு பத்திரிக்கையாளர் என்னிடம் சுங்கை சிப்புட்டில் மீண்டும் போட்டியிட நீங்கள் ஆர்வமாக இருக்கின்றீர்களா எனக் கேட்டார். அதற்கு நான் யார் போட்டியிடுவது என்பதை முடிவு செய்ய வேண்டியது பிரதமர்தான் எனக் கூறினேன். அதன் பின்னர் அந்த பத்திரிக்கையாளர் அப்படி சுங்கை சிப்புட்டில் நின்றால் நீங்கள் வெல்லக் கூடிய ஒரு வேட்பாளரா எனக் கேட்டார். நான் வெல்லக் கூடிய ஒரு வேட்பாளர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என நான் பதில் கூறினேன். ஆனால் இதை வைத்து நான் பழனிவேலுவிடம் மீண்டும் சுங்கை சிப்புட்டில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாக பொருள்படாது” என்றும் சாமிவேலு விளக்கினார்.

இதே போன்று டாக்டர் சுப்ராவும் எனது பதிலைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார் என்று கூறிய சாமிவேலு, எனது உண்மையான நோக்கத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை, இதனால் தான் வருத்தமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

“அவர்கள் இருவரும், தங்களின் வாயைத் திறப்பதற்கு முன்னால் முதலில் என்னை கூப்பிட்டு என்ன நடந்தது என்று கேட்டிருக்க வேண்டும்” என்று சாமிவேலு காட்டமாக கூறினார்.

பழனிவேலு, சுப்ரா இருவருமே விவரம் அறியாமல் முன்கூட்டியே வாயைத் திறந்திருப்பதன் மூலம் தங்களின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டியுள்ளனர் என்றும் சாமிவேலு சாடினார்.

“இவர்களுக்காக நான் அரசியல் போராட்டம் நடத்தினேன்”

“நான் தேசியத் தலைவராக இருந்தபோது பழனிவேலு, டாக்டர் சுப்ரா இருவருக்குமாக நான்தான் அரசியல் போராட்டம் நடத்தினேன். அவர்கள் இன்று இருக்கும் நிலையும், பதவிகளும் அவர்களுக்காக நான் நடத்திய அரசியல் போராட்டங்களின் விளைவால் அவர்களுக்கு கிடைத்தது என்பதை அவர்கள் மறந்து விடக் கூடாது” என்றும் சாமிவேலு நினைவூட்டினார்.

“சுங்கை சிப்புட்டை மீட்க போராடுவேன்”

“என்னைப் பொறுத்தவரை சுங்கை சிப்புட் தொகுதியை தேசிய முன்னணிக்காக மீண்டும் வெற்றி பெற்றுத் தர பிரதமர் என்மீது நம்பிக்கை வைத்து ஒரு பொறுப்பை சுமத்தியுள்ளார். யார் வேட்பாளரா இருந்தாலும் அந்த பொறுப்பிற்காக நான், சுங்கை சிப்புட் தேசிய முன்னணி தலைவர் என்ற முறையில் கடுமையாக பாடுபடுவேன்” என்றும் சாமிவேலு கூறியுள்ளார்.

வேட்பாளர் தேர்வுகளில் குழப்பம், எதிர்ப்புகள், உட்கட்சிப் பூசல் என ம.இ.காவில் பல பிரச்சனைகள் தற்போது நீறு பூத்த நெருப்பாக உறங்கிக் கிடக்கின்றன அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

பொதுத் தேர்தல் முடிந்ததும் இவையெல்லாம் விஸ்வரூபம் எடுத்து வெடிக்கும் என்றும் அந்த கால கட்டத்தில் ம.இ.கா பிரச்சனைகளில் சாமிவேலு மீண்டும் முக்கிய பங்காற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.