ஜோர்ஜ் டவுன்: ஜோர்ஜ் டவுனில் உள்ள ஜாலான் லோகானில் இரண்டு ஆடம்பர வீடுகளில் சீனாவிலிருந்து இயங்கும் போலி முதலீட்டு குழுவுடன் பணிபுரிவதாக நம்பப்படும் 79 சீன நாட்டினர் மற்றும் ஏழு உள்ளூர் நபர்களை காவல் துறையினர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.
கண்காணிப்பு மற்றும் உளவுத்துறையின் அடிப்படையில் இரவு 7 மணியளவில், அவ்வீடுகளில் சோதனை செய்யப்பட்டதாக வடகிழக்கு மாவட்ட காவல்துறை தலைவர் சே சைமானி சே அவாங் தெரிவித்தார்.
“சோதனையின்போது, அம்மூன்று மாடி ஆடம்பர வீட்டில் 77 ஆண்களும் ஒன்பது பெண்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் கணினிகளுடன் இருந்தனர்” என்று சே சைமானி நேற்று தெரிவித்தார்.
சீன நாட்டினர் அனைவரும் எந்தவொரு முறையான பயண ஆவணமும் வைத்திருக்கவில்லை என்று சைமானி குறிப்பிட்டார். மேலும் கமிஷனைத் தவிர்த்து ஒரு மாதத்திற்கு 4,000 ரென்மின்பி (அதாவது சுமார் 2,355 ரிங்கிட்) வழங்கப்படுகிற வேளையில், உள்ளூர் வாசிகளுக்கு 1,600 ரிங்கிட் வழங்கப்படுவதாக அவர் கூறினார். விற்பனை பங்குடன் மாதத்திற்கு இவர்களது சம்பளம் 10,000 ரிங்கிட் வரையிலும் அடைய என்றும் சைமானி தெரிவித்தார்.
சோதனையைத் தொடர்ந்து, அக்குழு பயன்படுத்திய 460 கைபேசிகள், 55 மடிக்கணினிகள், 25 கணினிகள், மற்றும் 24 பதிவு புத்தகங்கள் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
20 முதல் 42 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420-இன் கீழ் விசாரணைக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.