கோலாலம்பூர்: ஒரே நேரத்தில் வரிகளை குறைப்பதும் மானியங்களை அதிகரிப்பதும் அரசால் சாத்தியப்படாத விவகாரம் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
“மக்கள் விரும்புவது என்னவென்றால் குறைந்த வரி மற்றும் அதிக மானியங்கள், அது சாத்தியமில்லை. எங்களால் வரிகளை குறைத்து மானியங்களை அதிகரிக்க முடியாது.”
“நாங்கள் வரியைக் குறைக்க முயற்சிப்போம். ஆனால், மானியம் வழங்க விரும்பினால் அரசாங்கத்திடம் பணம் இருக்க வேண்டும்” என்று கோலாலம்பூரில் இன்று வியாழக்கிழமை அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
2020-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான கேள்விகளுக்கு மகாதீர் பதிலளித்த போது மகாதீர் இவ்வாறு கூறினார்.
அதிக வருமானம் கொண்ட குழுக்களுக்கு அரசாங்கம் வரி விதிக்கும் என்று பிரதமர் கூறினார். தகுதி வாய்ந்த குழுக்களுக்கு அரசாங்க மானியங்கள் வழங்கப்படும் என்றும், இது விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
“அரசாங்க மானியங்களை யார் பெறுவார்கள் என்பதை நாங்கள் தீர்மானிப்போம்” என்று அவர் கூறினார்.