சென்னை: வருகிற அக்டோபர் 21-ஆம் தேதி விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அங்கு போட்டியிடும் கட்சிகளுக்கு இடையே பிரச்சாரம் சூடு பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, விக்கிரவாண்டி தொகுதியில் ஒரு நிகழ்ச்சியின் போது பேசிய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இதனால், தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது.
“காந்தியை, கோட்சே சுட்டது என்று பலர் கூறி வருகிறார்கள், பொதுவில் அது குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதேபோல், ராஜீவ் காந்தியைக் கொன்றோம்.” என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருக்கும் சீமான் வீட்டுக்கும் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, மலேசியாவில் தற்போது விடுதலைப் புலிகள் தொடர்பில் கைதாகி வருபவர்கள் சீமானுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளது, நிலைமையை மேலும் பதற்றத்தில் ஆழ்த்தலாம்.