கோலாலம்பூர்: பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் (சோஸ்மா) கீழ் தங்களது இரு உறுப்பினர்களை தடுத்து வைத்திருப்பது குறித்த விசாரணையில் கவனம் செலுத்துமாறு, காவல் துறையை ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டார்.
எந்த ஜசெக அரசியல் தலைவரும் இனி தடுத்து வைக்கப்பட மாட்டார் என்று காவல் துறை உறுதியளித்ததாக குவான் எங் கூறியதை, புக்கிட் அமான் பயங்கரவாத பிரிவு உதவி இயக்குனர், டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை கருத்துரைத்தது குறித்து அவர் தெரிவித்தார்.
“அயோப் எனது அறிக்கையை வாசிப்பார் என்று நம்புகிறேன். ஒரு தேசியத் தலைவரின் அறிக்கையைத் திசைத் திருப்ப வேண்டாம். இங்கே, நாங்கள் காவல் துறையை ஆதரிக்கிறோம் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். பொருத்தமற்ற கருத்துக்களை வெளியிடுவதை விடுத்து, காவல்துறையினர் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்”
“எனது அறிக்கை மக்கள் பிரதிநிதிகள் குறித்தது. இன்னும் மக்கள் பிரதிநிதிகள் தடுத்து வைக்கப்பட்டால், இதன் பொருள் எனக்கு தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்விசாரணையில் விரைவாக தீர்வு காணும் வகையில் கவனம் செலுத்துவோம், ”என்று அவர் இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை, அயோப் கான், நாட்டில் விடுதலைப் புலிகள் நடவடிக்கைகள் தொடர்பாக மேலும் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள் என்ற தகவலை குவான் எங் எங்கிருந்து பெற்றார் என்பது குறித்து தனக்குத் தெரியவில்லை என்று கூறியிருந்தார்.