Home One Line P0 ஐபிஎப் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார்

ஐபிஎப் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார்

1190
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஐபிஎப் (IPF – Indian Progressive Front) எனப்படும் இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தேசிய இருதயக் கழக மருத்துவமனையில் (ஐஜேஎன்) காலமானார்.

54 வயதே நிரம்பிய அவர் திடீரென மாரடைப்பால் காலமாகியுள்ள செய்தி ஐபிஎப் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமரர் டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதனின் தீவிர ஆதரவாளராக தனது அரசியல் பயணத்தை மஇகாவில் தொடக்கிய சம்பந்தன், பின்னர் பண்டிதன் மஇகாவிலிருந்து நீக்கப்பட்டு, ஐபிஎப் என்ற புதிய அரசியல் கட்சியைத் தோற்றுவித்தபோது அவருடன் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார்.

#TamilSchoolmychoice

பண்டிதனின் தலைமையின் கீழ் ஐபிஎப் கட்சியின் முக்கியப் பதவிகளில் செயல்பட்ட சம்பந்தன், பண்டிதனோடு இணைந்து நாடு முழுமையிலும், ஐபிஎப் கிளைகளை அமைக்கவும், கட்சியை வளர்க்கவும் கடுமையாகப் பாடுபட்டார்.

2008-ஆம் ஆண்டில் பண்டிதன் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து கட்சி தலைமைத்துவப் போராட்டங்களால் சிதறியிருந்த, நிலையில், பண்டிதனின் துணைவியார் புவான்ஸ்ரீ ஜெயஸ்ரீ பண்டிதனின் ஆதரவோடு தலைமைப் பொறுப்பை ஏற்ற சம்பந்தன் அப்போது முதல் ஐபிஎப் கட்சியைத் திறம்பட நடத்தி வந்தார்.

சாதாரண குடும்பப் பின்னணி, பட்டப் படிப்பு எதனையும் கொண்டிராதவர் என்ற நிலையிலும், ஐபிஎப் கட்சி உறுப்பினர்களோடு அணுக்கமானத் தொடர்புகளை வைத்துக் கொண்டதன் மூலமும், தேசிய முன்னணியின் தலைமைத்துவம் மற்றும் அந்தக் கூட்டணியின் மற்ற கட்சித் தலைவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றியும், ஐபிஎப் கட்சியை வலிமையான ஒரு கட்சியாக, தேசிய முன்னணியின் ஆதரவுக் களமாக உருமாற்றினார்.

தேசிய முன்னணியில் இணைவதற்கு ஐபிஎப் நீண்ட காலமாகப் போராடி வந்தாலும், மஇகா காட்டி வந்த எதிர்ப்பால் அந்தக் கட்சி தேசிய முன்னணியில் இணைய முடியாத சூழல் இருந்து வந்தது. இருப்பினும், தேசிய முன்னணியில் நேரடி உறுப்பியம் பெறாத ஆதரவுக் கட்சியாக ஐபிஎப் கட்சியை சம்பந்தன் தொடர்ந்து வழிநடத்தி வந்தார்.

கடந்த செப்டம்பர் 2019-இல் நடைபெற்ற ஐபிஎப் கட்சியின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்த அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி, தேசிய முன்னணி அரசியல் அமைப்புச் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டதும், ஐபிஎப் கட்சியை தேசிய முன்னணி கூட்டணியில் சேர்த்துக் கொள்ள உறுதியளித்தார்.

எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் ஐபிஎப் கட்சியிலிலிருந்து தேசிய முன்னணி சார்பில் ஒரு நாடாளுமன்றம், ஒரு சட்டமன்றத்திற்கு வேட்பாளர்களை நிறுத்தப்படுவதை நான் உறுதி செய்வேன் என்றும் சாஹிட் அறிவித்திருந்தார்.

தேசிய முன்னணி கூட்டணிக்கு ஐபிஎப் தொடர்ந்து வழங்கி வந்த ஆதரவு காரணமாக 2017-இல் சம்பந்தன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக (செனட்டராக) மூன்றாண்டுகள் கொண்ட ஒரு தவணைக்கு நியமிக்கப்பட்டார்.

சம்பந்தனின் இறுதிச் சடங்குகள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.