கோலாலம்பூர்: பி40 குறைந்த வருமானம் பெரும் தரப்பினர், சிறந்த வாழ்க்கைக்காக தங்களின் வருமானத்தை அதிகரிக்க சிறு அளவில் இருந்தாலும் வணிகத்தில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
இதன் மூலமாக அவர்களின் சமூக– பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும், நகர்ப்புற வறுமையிலிருந்து வெளியேறுவதற்கும் உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். அடுத்ததாக அவர்கள் தங்கள் வணிகத்தை வளர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
“மலேசியாவில் சில தரப்பினர் தங்கள் வணிகத்தை பெருக்கிக் கொள்ள போதுமான திறன் இல்லாமல் இருப்பதை நாங்கள் காண்கிறோம். அவர்கள் நிலையான வருமானத்தை மட்டும் நம்புகிறார்கள். அவர்களின் அன்றாட தேவைகளுக்கு போதுமான பணம் சம்பாதித்தவுடன், அவர்கள் தங்கள் தொழிலை வளர்க்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை” என்று அவர் வறுமை ஒழிப்பு மன்றத்தைத் திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
எனவே, நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் வறுமையிலிருந்து விடுபட அவர்களின் தொழில்களை வளர்த்து விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்து அரசாங்கம் அவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.