
கோலாலம்பூர்: இந்தியர்களிடையே நல்லுறவைக் பேணிக் காக்கும் வகையில், துணிச்சலாகக் குரல் கொடுத்து வந்த இந்தியர் முற்போக்கு கட்சியின் (ஐபிஎப்) தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ எம். சம்பந்தனின் மறைவு ஆழ்ந்த வேதனையை அளிப்பதாக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சம்பந்தன் இந்நாட்டிலுள்ள இந்திய இனத்தின் மானம் காக்கவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகவும் குரல் கொடுத்தவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மறைந்த டத்தோ எம்.பண்டிதன் அக்கட்சியின் தேசியத் தலைவராக இருந்த காலக்கட்டத்தில், அவருக்கு உற்றத் தோழனாகவும், அவரது அரசியல் வாழ்க்கையின் தீவிர ஆதரவாளராகவவும் சம்பந்தன் இருந்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், பண்டிதனின் இலட்சியங்களுக்கு உறுதுணையாகவும், அவரது இறுதி மூச்சுவரை உடனிருந்து சம்பந்தன்பாடுபட்டவர் என்றும் இன்று புதன்கிழமை வெளியிட்ட தமது பத்திரிகை செய்தியில் விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.
“ஒரு சாதாரண மனிதாக இருந்த செனட்டர் டத்தோ எம். சம்பந்தன் அவர்களின் பலவகையான போராட்டங்களின் வழி தன்னையும், தன்னைச் சார்ந்த கட்சியையும் உயர்த்தியதால்தான், அரசு அவரை அங்கீகரித்து, டத்தோ விருது வழங்கியதுடன், பின்னர் செனட்டர் பதவியையும் வழங்கியது. ஐபிஎப் கட்சியை ஓர் உயர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்திலும், தேசிய முன்னணியில் இக்கட்சியை ஓர் உறுப்புக் கட்சியாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும் அவர் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் மறக்க முடியாதது.” என்று அவர் பதிவிட்டார்.
அவரைப் பிரிந்து துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலை மலேசிய இந்தியர் காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்வதாகவும் நாடாளுமன்ற மேலவைத் தலைவரான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.