கோலாலம்பூர்: இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் அனைவரும் தமது பேச்சுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டை சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் மறுத்துள்ளார்.
இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக அற்பமான கூற்றுக்களை முன்வைப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
“என்ஐஏ, சிபிஐ (மத்திய புலனாய்வுப் பிரிவு) மற்றும் காவல்துறையினர் எனது ஆயிரக்கணக்கான காணொளிகள், உரைகள் மற்றும் அச்சிடப்பட்ட பொருட்களை விசாரிக்க மூன்று ஆண்டுகள் செலவிட்டனர். ஆனால், அக்காணொளிகள் அல்லது எழுத்துப்பூர்வமாக நான் வன்முறையை ஊக்குவித்தேன் என்று ஒரு அறிக்கையும் அவர்கள் கொண்டு வரவில்லை.”
“பயங்கரவாத நடவடிக்கைகளில் சிக்கிய 127 பேர் என்னால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறுகிறது. இது ஒரு அப்பட்டமான பொய், ”என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
மேலும் தெளிவு தேவைப்பட்டால் மலேசியாவில் அவரைச் சந்திக்க என்ஐஏ அதிகாரி அலோக் மித்தாவை ஜாகிர் மலேசியாவிற்கு அழைத்துள்ளார்.
“நான் அவரை எந்த நேரத்திலும் மலேசியாவில் வரவேற்க காத்திருக்கிறேன். என்னைப் பற்றிய என்ஐஏவின் தவறான எண்ணங்கள் அனைத்தையும் என்னால் தீர்த்து வைக்க முடியும். (ஆனால்) மித்தா எனது அழைப்பை ஏற்றுக்கொள்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை” என்று அவர் கூறினார்.
மலேசியாவில் நிரந்தர குடியுரிமைப் பெற்றிருக்கும் ஜாகிர் நாயக், பணமோசடி மற்றும் வெறுப்பைத் தூண்டிய குற்றச்சாட்டில் இந்திய அதிகாரிகளால் கோரப்படுகிறார்.
இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று ஜாகிர் கூறியுள்ளார்.