கோலாலம்பூர்: 2015-ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலும் மலேசிய திவால் அமைப்பால் பதிவு செய்யப்பட்ட 80,625 திவால் வழக்குகள் குறித்து மக்களவையில் இன்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
மலாய்க்காரர்கள் சுமார் 45,147 பேர் திவால் ஆன பட்டியலில் முதல் நிலையில் இருப்பதாக பிரதமர் துறை அமைச்சர் லியூ வுய் கியோங் தெரிவித்தார். இரண்டாவது நிலையில் சீனர்கள் சுமார் 20,914 பேர் திவால் ஆன பட்டியலில் உள்ளனர்.
“இந்தியர்கள் சுமார் 9,127 பேர் திவாலாகி உள்ளனர்.” என்று அவர் கூறினார்.
இந்த நான்கு ஆண்டுகளில், 56,173 ஆண்கள் திவாலாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார். பெண்கள் சுமார் 24,452 பேர் திவாலாகி உள்ளனர்.
திவால் ஆனவர்களில் பெரும்பாலோர் 35 முதல் 44 வரைக்கும் இடையிலான வயது கொண்டவர்கள். திவால் ஆனவர்களில் 28,296 பேர் இந்த வயது கொண்ட நபர்களாவர்.
இருப்பினும், மலேசியாவில் திவால் வழக்குகளின் வீதத்தைக் குறைக்க அரசாங்கம் எப்போதும் செயல்பட்டு வருவதாக லியூ கூறினார்.
“இன்றைய இளைஞர்கள் சமீபத்திய போக்குகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாதது. இது அவர்களின் வருமானத்திற்கு அப்பாற்பட்டு செலவழிக்க காரணமாகிறது. திவால் உத்தரவின் அபாயங்கள் அல்லது விளைவுகள் குறித்து தனிநபருக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வையும் புரிந்துணர்வையும் அளிப்பதன் மூலமாக, இந்த குழுவிற்கு உதவ அரசாங்கம் முன்வந்துள்ளது”
“இந்த விழிப்புணர்வை கல்வி மற்றும் விவேகமான செலவு அணுகுமுறைகள் மூலம் உள்வாங்க முடியும்.” என்று அவர் கூறினார்.