கோலாலம்பூர் – பிரதமராக நியமிக்கப்பட்ட மொகிதின் யாசின் தனக்கு நாடாளுமன்றப் பெரும்பான்மை இருப்பதை மக்களுக்கு நிரூபிக்கவில்லை என்பதால் அவரது தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் என்ற தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என முன்னாள் சட்ட அமைச்சர் லியூ வுய் கியோங் (படம்) அறிவித்திருக்கிறார்.
சபா மாநிலத்தின் வாரிசான் கட்சியின் பத்து சாப்பி நாடாளுமன்ற உறுப்பினரான லியூ வுய் கியோங், மகாதீரின் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவராவார்.
நாடாளுமன்றக் கூட்டத்தை 8 நாட்களுக்கு நடத்த வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றையும் நாடாளுமன்றத்தில் லியூ சமர்ப்பித்திருக்கிறார்.
எனினும் நீண்ட காலம் நாடாளுமன்றத்தை நடத்தினால் கொவிட்19 தொற்று அபாயம் இருப்பதாகக் கூறி மொகிதினின் தேசியக் கூட்டணி அரசாங்கம் ஒரு நாள் நாடாளுமன்றத்தை, அதுவும் மாமன்னர் உரை மட்டுமே கொண்டதாக நடத்துகிறது.
“நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டங்களை இந்த அரசாங்கம் சிதைப்பதை நாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பின்கதவு வழியாக அமைக்கப்பட்ட ஓர் அரசாங்கம் நமது அரசியலமைப்பு சட்டத்தை நம்மிடமிருந்து திருடுவதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. நமது அரசியலமைப்பைக் காப்பாற்ற நாம் அனைவருக்கும் உரிமை இருக்கிறது” என்றும் முகநூல் வழியாக நேற்று சனிக்கிழமை (மே 17) நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் லியூ தெரிவித்தார்.
எனவே, மொகிதினுக்கு பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் இருக்கிறதா என்பதைக் கண்டறியும் உரிமையை மக்களிடம் இருந்து பறித்திருக்கும் இந்த அரசாங்கத்தின் மீது வழக்கு தொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் லியூ கூறியிருக்கிறார்.