கோலாலம்பூர்: பயங்கரவாத அமைப்புகள் என்று சந்தேகிக்கப்படும் அனைத்து அமைப்புகளின் பட்டியலையும், அதற்கான காரணங்களையும் அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று சுவாராம் இன்று புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நடவடிக்கை மக்கள் அறியாமலே அக்குழுக்களுடன் ஈடுபடுவதைத் தடுக்கும் என்றும், இறுதியில் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) (சொஸ்மா) சட்டம் அல்லது பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் விசாரணையின்றி தடுத்து வைக்கப்படும் சூழல் ஏற்படாது என்றும் சுவாராம் ஒருங்கிணைப்பாளர் அமீர் அப்துல் ஹாடி கூறினார்.
“பயங்கரவாதம் தொடர்பான அமைப்புகளின் பட்டியலை அரசாங்கம் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்பது எங்கள் திட்டங்களில் ஒன்றாகும்” என்று அமீர் கூறினார்.
“அது மட்டுமல்லாமல், அக்குழுக்களை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்த பயன்படும் நடைமுறையையும் அம்பலப்படுத்த வேண்டும். இல்லையென்றால், ஒருநாள், சுவாராம் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருக்கலாம்” என்று அமீர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
சுவாராம், அம்னஸ்டி இன்டர்நேஷனல் மலேசியா மற்றும் பிஎஸ்எம் கட்சி உள்ளிட்ட பிற குழுக்களுடன் சேர்ந்து, சொஸ்மா, 1959-ஆம் ஆண்டுக்கான குற்றத் தடுப்பு (போகா) சட்டம் மற்றும் 2015-ஆம் ஆண்டுக்கன வன்முறை தடுப்பு (பிஓடிஏ) சட்டம் கூறுகளையும் இரத்து செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளன.