கோலாலம்பூர்: விடுதலைப் புலிகள் விவகாரமாக கைது செய்யப்பட்டு, சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களின் மனைவிகள் புக்கிட் அமான் காவல் நிலைய வளாகத்தில் அமைதி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை பெய்த மழையையும் பொருட்படுத்தாது அவர்கள் தங்களின் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மலாக்கா சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், எஸ்.சந்துரு, வி. சுரேஷ் குமார் ஆகியோரின் மனைவிகள் இதில் பங்கெடுத்துள்ளனர். இவர்களின் இந்த போராட்டம் இந்திய மக்கள் மட்டுமன்றி, அரசியல் தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் கைதானது நியாயமற்றது என்று மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினரின் மனைவியான உமா தேவி கூறினார்.
இலங்கையில் போரில் இறுதிக்கட்டத்தில் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதை, ஒரு குற்றமாகக் கருதி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சந்தேகம் இருக்குமாயின், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்கலாம் என்றும், சொஸ்மாவின் கீழ் கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லையென்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரமாக அவர்களை சந்திக்க வந்த அமைச்சர்களும் அவர்களை சமாதானப்படுத்தும் வேலையை மட்டுமே செய்ததாக உமா தேவி சாடினார். ஜசெக தலைவர்கள் இந்த விவகாரத்தில் முன்வந்து எந்த நடவடிக்கையும் எடுக்காததும், அரசாங்கத்தில் இது குறித்து தொடர்ந்து பேசாததும் பொது மக்களின் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளது.
இம்மாதிரியான சூழலில் தாங்கள் தீபாவளியைக் கொண்டாட முடியாது என்றும், காவல் துறை அவர்களின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வரையில் போராட்டத்தை தொடர்ந்து நடத்த இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.