கோலாலம்பூர்: கூட்டாட்சி சட்டங்களை மீறும் சித்தாந்தங்களை பரப்பிய குற்றவாளியாக ஜசெக நிரூபிக்கப்பட்டால், அக்கட்சி தடை செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.
சர்ச்சைக்குரிய கேளிக்கை புத்தகத்தில் ஜசெகவின் தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் இது சாத்தியம் என்று அவர் கூறினார். கம்யூனிச சித்தாந்தத்தைப் பற்றிய தவறான உண்மைகளை ஊக்குவித்தல் மற்றும் பரப்புதல் காரணமாக அவர்கள் மீது இந்த நடவடிக்கையை எடுக்கலாம் என்று அவர் கூறினார்.
மலேசியாவின் வரலாறு குறித்து இளைய தலைமுறையினரிடையே இந்த புத்தகம் சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடும், மேலும் பல இன சமூகத்தின் உணர்திறன் குறித்து அவமரியாதை செய்யப்படுவதாகவும் உள்துறை அமைச்சு கூறியுள்ளது.
கேள்விக்குட்பதுட்டப்பட்டுள்ள அப்புத்தகம் முன்னாள் ஜசெக உறுப்பினர் ஹெவ் குவான் யாவால் உருவாக்கப்பட்டது. மேலும், நிதி அமைச்சராக இருக்கும் ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் மற்றும் ஜசெக தலைவர் டான் கோக் வாய் ஆகியோரால் அப்புத்தகத்திற்கு முன்னுரைகள் எழுதப்பட்டுள்ளது.
“நமக்குத் தெரிந்த வரையில், கம்யூனிச சித்தாந்தம் சுதந்திரத்திற்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தடைசெய்யப்பட்டது மற்றும் கம்யூனிச போராட்டம் (அப்போது) ஓர் ஆயுதப் போராட்டமாக இருந்து, பல உயிர்களை தியாகம் செய்தது.”
“எனவே அனைத்து ஜசெக தலைவர்களையும் இந்த கேளிக்கைக் புத்தக வெளியீட்டில் ஈடுபட்டுள்ள எவரையும் கூட்டாட்சி சட்டங்களுக்கு முரணாக இருப்பதால், அவர்களை விசாரிக்குமாறு உள்துறை அமைச்சகத்தை எதிர்க்கட்சி வலியுறுத்துகிறது.” என்று அவர் குறிப்பிட்டார்.
“எனவே, சங்கங்கள் சட்டம் 1966-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஜசெக, நம் சட்டங்களுக்கு எதிரானதாக இருக்கும் (சித்தாந்தங்களை) ஊக்குவிப்பதில் ஈடுபடுவது தவறு. ஜசெக விசாரணை செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஜசெக தடை செய்யப்பட வேண்டும், ”என்று அம்னோ உதவித் தலைவருமான இஸ்மாயில் தெரிவித்தார்.