மதுரை – மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் முதலாம் உலகத் தமிழிசை மாநாட்டை சென்னையில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் கூட்டுகிறது.
இந்த மாநாடு, 2019-ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 14, 15ஆம் நாள்களில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது.
முத்தமிழில் நடுநாயகமாக விளங்கும் இசைத் தமிழுக்கு இப்பொழுதுதான் உலக அளவில் முதல் மாநாடு நடத்தப் பெறுகிறது என்பது வியப்பாக உள்ளது. இயலுக்கு 1966ஆம் ஆண்டு தனிநாயக அடிகள் முன்னின்று துன் சம்பந்தனார் தலைமையில் முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை மலாயா பல்கலைக்கழகத்தில் கூட்டினார்.
தொடர்ந்து 1968இல் தமிழக முதல்வராய் இருந்த பேரறிஞர் அண்ணா தலைமையில் சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கூட்டப் பெற்றது. அது தொடர்ந்து இன்று வரை பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. வெவ்வேறு அமைப்புகள் பலவகையான உலக மாநாடுகளை நடத்தி வருகின்றன. ஆனால் இசைக்கோ, நாடகத்திற்கோ ஏன் அத்துணை முதன்மை தரப்பெறவில்லை என்று தெரியவில்லை.

இன்று முத்தமிழ், தமிழகத்தொடு முடங்கிவிடவில்லை தமிழரின் மற்றொரு தாயகமாய் இருந்த இலங்கையில் செழித்து வளர்ந்து வருகிறது. அங்கு தமிழ் ஆட்சி மொழிகளின் ஒன்றாகத் திகழ்கிறது. இன்று தமிழகத்தில் மட்டுமன்று உலகின் ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் தமிழ் வழங்கி வருகிறது. ஆகவே உலக அளவில் இசைக்கு மட்டுமல்லாமல் நாடகத்திற்கும் மாநாடு கூட்டப்பெறுவது காலத்தின் கட்டாயமாகும்.
இசைக்கு இப்பொழுதுதான் முதல் உலக மாநாடு கூட்டப்பெறுகிறது என்றாலும் அதன் வளர்ச்சிக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே (1919) இசைப் பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதர் மாநாடு கூட்டியுள்ளார். அண்ணாமலை அரசர் தில்லையில் (சிதம்பரம்) தாம் நிறுவிய அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இசைக்கு முதன்மை அளித்துத் தமிழிசைக்கு ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். தமிழைத் “துக்கடா” என்று இழிவு படுத்திப் பிறமொழிப் பாடல்களே கொண்ட கருநாடக இசைக்கு மாறாக முழுக்க முழுக்கத் தமிழிசையை அறிமுகப்படுத்தி வளர்க்க முற்பட்டார். பேரறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த தமிழக அரசு, தமிழிசைக் கல்லூரிகள் நிறுவி தமிழிசையை வளர்த்து வருகிறது. இந்த நிலை உலகமெங்கும் பரவ வேண்டும். தமிழை இழிவாகக் கருதும் கருநாடக இசைக்கு மாற்றாகத் தமிழிசை உலகளாவிப் பரவ வேண்டும். இதற்கு இந்த மாநாடு வழிவகுக்க வேண்டும்.

மதுரையில் தமிழக அரசு நிறுவியுள்ள தமிழ்ச் சங்கத்தில் நடக்கும் இந்த முதலாம் தமிழிசை மாநாட்டை, சென்னையில் தமிழாய்வுக்கு முதன்மை தந்து பயன்மிக்க எண்ணற்ற நூல்களை வெளியிட்டு வரும். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் நடத்துகிறது. இப்பொழுது அதன் இயக்குநராய் விளங்குபவர் முனைவர் கோ. விசயராகவன். உதவிப் பேராசிரியர் முனைவர் கு.சிதம்பரம் முதலிய பெருமக்கள் பலர் அங்குத் தமிழ்ப்பணி ஆற்றி வருகின்றனர்.

தமிழிசைக்கு உயிரூட்டிப் பரவச் செய்யும் நோக்கில் கூட்டப்பெறும் இம் மாநாடு, 2019 திசம்பர் மாதம் 14,15 ஆம் நாள்களில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது.
மலேசியப் பேராளர்களும் பங்கு கொள்ளலாம்
மேற்படி தமிழிசை மாநாட்டில் மலேசியாவிலிருந்தும் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் பங்கு கொள்ளலாம். இங்கும் நீண்ட நெடுங்காலமாக தமிழிசை புழக்கத்தில் இருந்து வருகிறது தமிழிசைப் பயிற்சி தரும் அமைப்புகளும் உள. அவைகளில் மிகப் பெரும்பாலானவை கருநாடக இசை முறையையே பின்பற்றுகின்றன. இங்கு அண்ணாமலை பல்கலைக் கழக இசைப் பாடத்திட்டத்தை அடிப்படையாய்க் கொண்டு இசை மாணவர்களை உருவாக்கியவர் நாகசுர வித்துவான் திரு.சுக்கூர் பழனிசாமி அவர்கள்.
அவரிடம் பயின்ற திரு. சிவகுரு, திரு. மு.நெ.இளவரசு, திருமதி. அல்லிமலர் மனோகரன் போன்றோர் தனித்தமிழிசை வளர்ச்சிக்குத் தொண்டாற்றி வருகின்றனர். இங்குத் தமிழ் இசை விழாக்களும் நடந்துள்ளன. தமிழ்நெறிக் கழகத் தலைவர் திருமாளவனும் தமிழிசை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
இங்கு தனித்தமிழிசை மரபு வேரூன்ற வேண்டுமென்னும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இருநூறு உள்ளூர்த் தனித்தமிழிசைப் பாடல் வரை தொகுத்திருக்கிறார்.
தமிழிசை மாநாடு தொடர்பான முழுவிவரங்கள் பெற, +91-9500106269 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு அறியலாம்.
பதிவு போன்ற பிறவிவரங்களை www.isaitamiljournal.com என்ற அகப் பக்கத்தின் வழியும் அறியலாம்.
-தகவல்கள் உதவி : முனைவர் முரசு நெடுமாறன்
Email : murasunedumaran@gmail.com