Home நாடு “முதலாம் உலகத் தமிழிசை மாநாடு-ஒரு பரந்துபட்ட பார்வை” – முரசு நெடுமாறன் (பகுதி # 2)

“முதலாம் உலகத் தமிழிசை மாநாடு-ஒரு பரந்துபட்ட பார்வை” – முரசு நெடுமாறன் (பகுதி # 2)

1155
0
SHARE
Ad

(சென்னையில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மதுரை தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் டிசம்பர் 14, 15-ஆம் தேதிகளில் முதலாம் உலகத் தமிழிசை மாநாட்டை நடத்துகிறது. அதனை முன்னிட்டு தமிழிசை ஆர்வலரும், மலேசியாவின் மூத்த கவிஞரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் வருகைதரு பேராசிரியருமான முனைவர் முரசு நெடுமாறன் (படம்) கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் ஆய்வுக் கட்டுரையின் இரண்டாம் பகுதி  இது. கட்டுரையின் முதல் பகுதி வியாழக்கிழமை (டிசம்பர் 12) செல்லியல் பதிப்பில் வெளியிடப்பட்டது)

தமிழகத்திற்கு வெளியே…

மேற்கண்ட தமிழிசை மீட்பு  நடவடிக்கைகள் யாவும் தமிழகத்தில் மட்டுமே மேற்கொள்ளப் பெற்றன. தமிழ் இன்று தென்குமரியைத் தாண்டி உலகில் ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் பயின்று வருகிறது. இலங்கையில் தமிழ் ஆட்சிமொழிகளுள் ஒன்று சிங்கப்பூரிலும் அங்ஙனமே. ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அரசு ஒப்பிசைவு – அங்கீகாரம் பெற்ற மொழியாகத் தமிழ் ஆளுமை கொண்டுள்ளது.

கலை வளர்ச்சியில் நாட்டம்

தமிழர் குடியேறியுள்ள நாடுகளில் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே இசை, நடனம் முதலாய பாரம்பரியக் கலைகளை அவர்கள் வளர்த்துக் கொள்வதில் நாட்டம் செலுத்தி வருவதைக் காணமுடிகிறது. தமிழர்க்குச் சொந்த நாடாயிருந்த இலங்கையில் நடனம் போன்ற கலைகளில் தனிமரபையே ஏற்படுத்திக் காத்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

தமிழகத்தையும் ஈழத்தையும்  அடுத்து, மற்ற நாடுகளை விட மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தாய்மொழியான தமிழும் தமிழ்க் கலைகளும் வாழும் வளரும் வாய்ப்புச் சற்றுக் கூடுதலாகவே உள்ளன. ஆனால் இசைக் கலை பயிற்றுமுறை மிகப்பெரும்பாலும் கருநாடக இசையாகவே இருந்து வருகிறது.

இசைவல்லுநர் பழனிசாமி அவர்கள் பணி

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கிள்ளான் பகுதியில் வாழ்ந்தவரான நினைவில்  வாழும்  சுக்கூர் என்ற அ. பழனிசாமி (படம்) அவர்கள் மிகச்சிறந்த  நாகசுர வித்துவான். இசையை மிக ஆழமாகக்  கற்றுணர்ந்த வல்லுநர். அவர் அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழிசை முறையில் நாட்டம் கொண்டார். அவர் நடத்திய இசை வகுப்புகளில் அம்முறையிலேயே கற்பித்துப் பலரை உருவாக்கிய சிறப்பிற்குரியவர். அவர் மாணவர்களான இளவரசு நெடுமாறன், அல்லிமலர் மனோகரன், சிவகுரு, சர்மிளா சிவகுரு ஆகியோர் தம் ஆசிரியர் வழியிலேயே இசைக் கலையை வளர்த்து வருகின்றனர். அம்முறையிலேயே இசை கற்பித்தலையும் மேற்கொண்டு வருகின்றனர். நினைவில் வாழும் நல்ல கலைஞர் மணிமாறன் என்பவர் இவ் வகையினர்.

நடன வகுப்புகள் நடத்துவோர் ஒருசில தமிழ்ப் பாடல்களைப் பயன்படுத்தினாலும் தெலுங்கு, சமற்கிருத பாடல்களுக்கே முதன்மை தந்து வருகின்றன. உணர்வாளர்களுக்கு இன்னும் தமிழிசை வாயில் சரியாகத் திறக்கவில்லை. வழிகாட்ட ஆளில்லை பயன்படுத்தப் போதிய படைப்புகள் கிட்டவில்லை என்பது மட்டுமன்று தமிழினம் தன் சொந்த அடையாளங்களை நிலை நிறத்த முடியாத தாழ்வு  நிலையையும் காட்டுகிறது.

உலகளாவிய தமிழிசை மாநாடு

இந்த வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்ட தமிழிசைக்கு இப்பொழுது உலகளாவிய முதல் தமிழிசை மாநாடு நடைபெறவிருக்கிறது. மாநாட்டுச் செயலவை அதன் நோக்கங்களை வெளியிட்டுள்ளது. அவை வருமாறு:

மாநாட்டுப் பொருண்மைகள்

*          தமிழிசையின் தோற்றமும் வளர்ச்சியும்

*          தமிழிசையின் தொன்மை

*          தமிழிசை நாடகம்

*          தமிழிசை மருத்துவம்

*          பாரம்பரியத்தை உணர்த்தும் தமிழிசை

*          திரையிசையில் தமிழிசையின் பங்களிப்பு

*          தமிழகத்தில் தமிழிசைக் கல்வி

*          தமிழிசை சார்ந்த பாடநூல்கள்

*          இசை வழித் தமிழ்க் கல்வி

*          தமிழ் நாடு அரசின்  தமிழிசை சார்ந்த திட்டங்கள்

*          தமிழிசை வளர்ச்சிக்குத் தமிழிசைக் கல்லூரிகளின் பங்களிப்பு

*          தமிழிசைப் பள்ளிகளின் வரலாறும் அதன் பணிகளும்

*          பல்கலைகழகங்களில் தமிழிசை ஆய்வுகள்

*          தன்னார்வத் தமிழிசைப் பள்ளிகளின் பங்களிப்பு

*          தமிழிசை நிகழ்ச்சிகள் அன்றும் இன்றும்

*          தமிழ் இலக்கியத்தில் தமிழிசை

*          தமிழிசை ஆளுமைகள்

*          தமிழிசைப் பாடல் பெற்ற திருத்தலங்கள்

*          இசைத் தூண்கள் (ம) கல்வெட்டுகள்

*          தமிழிசை ஓவியங்கள் (ம) சிற்பங்கள்

*          தமிழிசையில் இசைக்கருவிகளின் வகைகள்

*          தமிழிசைக் கலைஞர்களின் வாழ்வியல்

*          தமிழிசைக் கலஞர்களின் படைப்புகள்

*          தமிழிசைப் படைப்பாளர்களின் படைப்புகள்

*          தமிழிசையும் பிற இசைகளும்

*          அயல்நாடுகளில் தமிழிசை பரவல்

மாநாட்டின் நோக்கங்கள் சிறப்பானவையாகவே உள்ளன. இவை செயலுக்கு வர வேண்டும் என்பதே தமிழ்நெஞ்சர் எண்ணமாகும். கால மாறுதல்களுக்கேற்ப – கணினிக் காலத்திற்கேற்ப, வருங்கால குமுகாயத்திற்குப் பயன்சேர்க்கும் வண்ணம் மாநாட்டு நோக்கங்கள் நிறைவேறத்தக்க செயல்கள் நடந்தேற வேண்டுமென்பதே ஆர்வலர் எண்ணமாகும்.

அயல் நாடுகளில் தமிழிசை பரவல்

‘அயல் நாடுகளில் தமிழிசைபரவல்’ என்னும் ஒருவரி நோக்கத்தில் என்னென்ன செயல் திட்டங்கள் அடங்கியுள்ளன என்று தெரியவில்லை. இசை என்பது பாடிமகிழ்வதற்குரிய கலை என்பதோடு அதன் பயன்பாடு முழுமை பெற்றுவிடாது. இன்று நடனம் கற்பிக்கும் ஆசிரியர்கள் பெரும்பாலும் தெலுங்கு சமற்கிருதமொழிப் பாடல்களையே பயன்படுத்துகின்றனர். இசை அரங்குகளில் ‘துக்கடா’ என்பது போலவே பாரதியார், பாபநாசம் சிவன் போன்றோரின் சிலபாடல்களைப் பயன்படுத்துவர். அதற்கும் கீழே இறங்கார்.

நடனங்களில் தமிழிசையை பயன்படுத்த வேண்டுமென எண்ணுவோர்க்கு உரிய பாடல்கள் கிட்டுவதில்லை. இது முன்பே கூறப்பெற்றது. இந்தக் குறைகளெல்லாம் தீர உலகத் தமிழிசை மாநாடு தேவைகளையெல்லாம் நினைவில் கொண்டு திட்டமிட வேண்டும்; செயல்படுத்த வேண்டும். மாநாட்டை விளைபயன் மிக்கதாய் நடத்த வேண்டும். தொடர் முயற்சிகளுக்கு வித்திட வேண்டும்.

இசைவழித் தமிழ்க்கல்வி

“இசைவழித் தமிழ்க்கல்வி” என்ற நோக்கத்தின் விரிவு புரியவில்லை. மழலையர் பள்ளிகளில் தமிழ்ப் பாடல்களுக்கு இடமே இருப்பதில்லை. பால்மனம் மாறாப் பச்சிளம் மனங்களுக்குத் தாய்ப்பால் ஊட்டப் பெறுவதில்லை. ஆங்கிலப்  பாடல்களே அங்கு ஆளுமை கொள்கின்றன. அதனால் தலைமுறை தமிழ்உணர்வு  மிக்கதாய்  வளர  முடியவில்லை.

மழலையர் வகுப்புகளில் தமிழில் கற்பிக்க விரும்புவோர்க்குப் பாடல்கள் கிடைப்பதில்லை. தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குக் கற்றல் கற்பித்தலில் கவிதை / பாடல்கள் கற்பித்தலில் இசைக்குப் பெரும் பங்குண்டு. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா முதலாய பெருமக்கள் எழுதிக் குவித்துள்ள குழந்தைப்  பாடல்கள் தாளில் அச்சு வடிவில் குவிந்து கிடங்கின்றன. பாடல்களுக்கு அவற்றின் மெய்ப்பாடுகள் – உணர்வு நலங்கள் மாணவர்களுக்கு எட்டும் வண்ணம் இசை ஆட்சி மேலோங்க வேண்டும். இசை மாநாடு செவ்விசையில் மட்டுமே கருத்துச் செலுத்தாமல் குழந்தைகள் விடலைகளுக்கு பயன்படத்தக்க இசை முறையிலும் கருத்துச் செலுத்த வேண்டும்.

மலேசியாவில் நடந்த மாநாட்டில்…..

மலேசியாவில் 2018ஆம் ஆண்டு மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து மலாயாப் பல்கலைக்கழகத்தில் மூன்று நாள் நடத்திய முதலாம் உலகத் தமிழ் குழந்தை இலக்கிய மாநாட்டில் ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கு கொண்டனர். அம் மாநாட்டில் குழந்தை, சிறுவர்களுக்காக இரண்டு மணிநேரக் கலைவிழாவில் 15 அகவைக்குட்பட்ட மாணவர்களே பங்கு கொண்டனர். அந்த நிகழ்வு திரைப்படத் தாக்கம் சிறிதுமின்றி அவையோர் உள்ளத்தைத் தொடும் வண்ணம் நடந்தேறியது. அனைவரும் ஒருமித்த குரலில் பாராட்டினர். அந் நிகழ்வில் 20 மணித்துளி நேர இசை நாடகமொன்றும் நடந்து மாபெரும் வெற்றி கண்டது. அதனைப் புகழ்பெற்ற கமலா இந்திரா நாட்டியப் பள்ளி படைத்தது. இக் கட்டுறையாசிரியர் இயற்றிய அவ்விசை நாட்டிய நாடகத்திற்குப் பொருத்தமான இசைகூட்டிக்  கலைவிழாவை இயக்கி வெற்றி கண்டவர் இசைமுரசு இளவரசு நெடுமாறன்.

உலகத் தமிழ்க் குழந்தைக் கவிஞர்கள் தம் பத்துப்பாடல்களை சிறுவர்களைக் கொண்டு பாடவைத்தது அருள் நுண்கலைப் பள்ளி.

உலகத் தமிழர் எதிர்பார்ப்பு

மாநாட்டு நோக்கத்தில் “தமிழிசை நாடகம்” என்ற வரியைப் பார்த்ததும் இதனை இங்குச் சொல்ல வேண்டுவதாயிற்று.

இன்னும் நிரம்பச் சொல்லலாம். கட்டுரை நீண்டுவிடக் கூடாதே என்னும் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு இந்த அளவொடு நிறைவை நோக்குகிறது. மாநாடு சாதி, சமய, கட்சி, அரசியல் வேண்டியவர், வேண்டாதவர் என்னும் கட்டுகளை – தடைகளை யெல்லாம் கடந்து,  தனி மாந்தர் புகழ்ச்சிக்கு இடம் தராமல் இந்த அறிவியல் கணினிக் காலத்திற்கேற்ப அனைத்தும் வழவழப்பின்றி காலவரையறைக்குள் நடந்து நிறைவு பெற வேண்டும்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப – எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின் – குறள் 666

என்னும் திருவள்ளுவர் வாய்மொழிக்கேற்ப வகுத்துள்ள நோக்கம் நிறைவேறும் வண்ணம் மாநாடு செம்மையாக நடைபெற வேண்டுமென்பதே உலகத் தமிழ் நெஞ்சர்தம் விழைவாகும்.

“தமிழ் வளர்ப்போம் தமிழிசையை மேம்படுத்துவோம்,

தலைநிமிர்ந்து வாழ்வோம்!”

உசாத்துணை:

  1.  திருக்குறள்
  2. சிலப்பதிகாரம்
  3. கருணாமிர்த சாகரம் 1917 / 1994;    அன்றில் பதிப்பகம், மறுபதிப்பு, 1994 சென்னை
  1. மலேசியத்தமிழ்க் கவிதைக் களஞ்சியம்1997;    மலேசிய முரசு நெடுமாறன், அருள்மதியம் பதிப்பகம், கிள்ளான்.
  1. உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலர் (2010), உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலர்,  தமிழக அரசு
  1. உலகத்தமிழ்க் களஞ்சியம், முதல் தொகுதி 2018 (தொகுப்பு);    உமா பதிப்பகம்,  கோலாலம்பூர்
  1. இசைத்தமிழ்,  வெள்ளை வாரணர் 2018
  2. முதலாம்உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாட்டு மலர் (2018)   மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், கிள்ளான்.

இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை இந்த இணைப்பில் காணலாம்:

“முதலாம் உலகத் தமிழிசை மாநாடு-ஒரு பரந்துபட்ட பார்வை” – முரசு நெடுமாறன் (பகுதி # 1)