Home நாடு “முதலாம் உலகத் தமிழிசை மாநாடு-ஒரு பரந்துபட்ட பார்வை” – முரசு நெடுமாறன் (பகுதி # 1)

“முதலாம் உலகத் தமிழிசை மாநாடு-ஒரு பரந்துபட்ட பார்வை” – முரசு நெடுமாறன் (பகுதி # 1)

2414
0
SHARE
Ad

(சென்னையில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மதுரை தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் டிசம்பர் 14, 15-ஆம் தேதிகளில் முதலாம் உலகத் தமிழிசை மாநாட்டை நடத்துகிறது. அதனை முன்னிட்டு தமிழிசை ஆர்வலரும், மலேசியாவின் மூத்த கவிஞரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் வருகைதரு பேராசிரியருமான முனைவர் முரசு நெடுமாறன் (படம்) கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் இந்த ஆய்வுக் கட்டுரை இரண்டு பகுதிகளாக செல்லியலில் பதிவேற்றம் காண்கிறது)

முன்னுரை

பன்னெடுங் காலத்திற்கு முன்பே சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மண், மதுரை மாநகரம். தலை, இடை, கடை என முச்சங்கங்கள் முன்பு இயங்கின என்பதனை வரலாறு எடுத்தியம்புகிறது. அங்கு பாண்டித்துரைத் தேவர் (1867 – 1911) நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார் (1901); தமிழ்ப்பணி மேற்கொண்டார்.

இப்பொழுது முதலாம் தமிழிசை மாநாடு நடத்த முன்வந்துள்ள உலகத் தமிழ்ச்சங்கம், மாண்புமிகு தமிழக முதல்வராய் இருந்த எம். ஜி. இராமசந்திரன் அவர்கள் காலத்தில்  உருவானதாகும் (1981).

#TamilSchoolmychoice

முன்பிருந்த நான்கு சங்கங்களின் தொடர்ச்சியாக இதனைக் கொள்ள முடியாது. ஏனெனில் அவற்றின் நோக்கங்களுக்கும் இது கொண்டுள்ள நோக்கங்களுக்கும் வேறுபாடுகள் உள. இஃது உலகளாவிய தமிழ்ச் சங்கம். உலகெங்கும் இயங்கும் தமிழ்சார்ந்த இயக்கங்களை ஒன்றிணைப்பது இதன் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும். இச் சங்கத்தில் நடக்கும் முதல் உலகத் தமிழிசை மாநாடு இதுவாகும்.

அம் மாநாட்டைச் சென்னைத் தரமணியில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உலகத் தமிழ் சங்கத்துடன் இணைந்து நடத்தவிருக்கிறது. இவ்வேளையில் அந்நிறுவனத்தைப் பற்றிச் சிறிது அறிந்து கொள்வது சாலும்.

அண்ணா சிந்தனையில் உருவானது

பேரறிஞர் அண்ணா தமிழக முதல்வரான வேளையில் சென்னையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது (1968) [முதல் மாநாடு மலேசியாவில் நடந்தது(1966)] அப் பெருமகனார் எண்ணத்தில் தோன்றிய சிந்தனையே அந்நிறுவன உருவாக்கத்திற்கான கருவாகும்.

அச்சிந்தனைக்கு அண்ணாவிற்குப்பின்  முதல்வரான கலைஞர் கொடுத்த வடிவமே உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். உலகுதழுவித் தமிழ்ஆய்வை மேற்கொண்டு கருத்தரங்குகள் மாநாடுகள் நடத்துதல், வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு நூலெழுதி வெளியிடுதல் போன்றவை அந் நிறுவனத்தின் முதன்மைப் பணிகளாகும். அந் நிறுவனத்தின் முதல் இயக்குநர் முனைவர் கா. மீனாட்சி சுந்தரம். இப்போதைய இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் உதவிப் பேராசிரியர் முனைவர் கு. சிதம்பரம் முதலாய ஆய்வாளர் பலர் பணியாற்றுகின்றனர். உலகத் தமிழ்  சங்கத்துடன் இணைந்து அந்நிறுவனம் நடத்தவுள்ள தமிழிசை மாநாடு குறித்த ஒரு  பரந்துபட்ட பார்வையே இக் கட்டுரை.  

தமிழின் பழமை

தமிழ் என்று தோன்றியது என்று அறிய முடியாத பழமை வாய்ந்த மொழி; மூத்த மொழி; செம்மொழி; பாவாணர் முதலாயோர் அதுவே உலகின் முதல் மொழி என்று சான்று வழங்கியுள்ளனர். மேலை நாட்டறிஞர் சிலரும் இக் கருத்துடையவர்களாய் உள்ளனர்.

முத்தமிழ்

தமிழ் இயல், இசை நாடகம் என முப்பிரிவுகளைக் கொண்டது. அம் மூன்றும் தொன்று தொட்டே வழக்கில் உள்ளன. இதுநாள் வரை நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் தொல்காப்பியமே மூத்த முதல் நூலாக விளங்குகிறது. அது சற்றேறக் குறைய மூவாயிரம் ஆண்டுகள் பழமையுடையது. அந்நூலில் தமிழிசைபற்றிய குறிப்புகள் உள்ளனவெனில், தமிழிசையின் காலப் பழைமையை அத்துணை எளிதில் கணித்திட இயலாதன்றோ!

சிலப்பதிகாரத்தில் இசை பற்றிய செய்திகள்

தமிழர் கலைகளில் வல்லவர், தமிழ் இசை, நடனம் போன்ற நுண்கலைகள் காலத்தால் மூத்தவை என்பதற்கு இன்று நமக்கு வலுவான சான்றாக விளங்குவது 1800 ஆண்டுகளுக்கு முன்பு இளங்கோவடிகள் படைத்த சிலப்பதிகாரம். அதனில் இடம் பெற்றுள்ள அரங்கேற்றுக் காதையில் அப் பெருமகனார் பொதிந்து வைத்துள்ள குறிப்புகள் தமிழர் இசை, நடன – நாடகக் கலைகளில் எத்துணைத் திறன்பெற்றவர் என்பதற்கு அழுத்தமான சான்றாகும்.

வீழ்ச்சியுற்றதேன்?

தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடையே ஏற்பட்ட பகை, இடைவிடாத போர், மாற்றார்க்கு இடந்தந்தமை போன்றவை வீழ்ச்சிக்கு வழிவகுத்தன; ஆட்சி கைமாறி அதிகார வலிமை இழக்க நேர்ந்தது. அதனால் அனைத்துவகைத் தோல்விகளும் தொடர்ந்தன; தமிழ்இயல், இசை, நாடகக் கலைகளுக்கு யார் யாரோ சொந்தம் கொண்டாடும் அவலநிலை ஏற்பட்டது. இது தொடர்பான வரலாற்றுக் குறிப்புகளை நினைவுகூரல் சாலும்.

வெள்ளை வாரணர் கூறும் வரலாற்றுப் பின்னணி

“கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையுள்ள காலப் பகுதியில் தமிழக வரலாற்றில் ‘இருண்டகாலம்’ எனப் பேசப்படுகிறது. அப்போது இசைக் கலை மிகவும் அருகி மறையத் தொடங்கியது. தமிழரோடு தொடர்பில்லாத வேற்றின மக்களும் வேற்றுச் சமயங்களும் தமிழ் நாட்டிலே புகுந்து வேரூன்றியமையால் தமிழ்மக்கள் தெய்வக் கொள்கையில் நெகிழ்ந்து மனவுறுதி இழந்தவராய் தமது இசை முதலிய கலைகளையும் இழக்க நேர்ந்து சோர்வுற்றனர்”. [வெள்ளை வாரணர் (2018)] இவ்வரலாற்றுக் குறிப்பு, இடைக் காலத் தாழ்வுக்கான காரணத்தைத் தெளிவுபடுத்துகிறது.

வீழ்ச்சியிலிருந்து மீட்சி

இடையில் நேர்ந்த இவ் வீழ்ச்சி, தமிழிசையைத் தலைதூக்கவிடாமல் செய்துவிடவில்லை. “அருளாசிரியர்கள் சிலர்தோன்றி இயலையும் இசையையும் வளர்த்தனர்”. (மேலது) தேவாரம், திருவாசகம் பாடிய திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர் போன்ற நாயன்மார்களாலும் நாலாயிரம் திவ்விய பிரபந்தம் பாடிய ஆழ்வார்களாலும் தமிழ் இசை வீழ்ச்சியிலிருந்து மீட்சிபெற்றது. தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டிய இராசராசன் காலத்தில் இசை நடனக் கலைகள் செழித்திருந்தமையை வரலாறு உணர்த்துகிறது.

கல்லில் இசை

உலகத்தில் இசைத்துறையில் எவ்வினத்தவரும் நிகழ்த்தாத அருஞ்செயலைத் தமிழர் நிகழ்த்தியுள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் போன்ற சில கோயில்களில் இசைத்தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இசைக் கலை  அறிந்தவர் அத் தூண்களில் தட்டி இசை எழுப்ப முடியும். இஃது எளிதான திறன் அன்று.

கருநாடக இசை ஆயினமை

எத்தனையோ தடைகளைக் கடந்து வீறுகொண்டு மீண்ட தமிழிசை, தமிழர் விழிப்பின்மையால் மீண்டும் நலிந்து இன்றுவரை முழுமையாய் தலைநிமிர முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. தமிழைத் ‘துக்கடா’ என ஒதுக்கிவிட்டு, தெலுங்கு, கன்னட, சமற்கிருத மொழிகளில் பாடல்களைக் கொண்ட கருநாடக இசை முறையை நுழைய விட்டதும் எத்தனையோ முயற்சி மேற்கொண்டு போராடியும் அதனிலிருந்து முழுமையாய் மீள முடியாமையும் பின்னடைவிலிருந்து இன்னும் மீளவில்லை என்பதற்கான சான்றாகும்.

மற்றொரு சான்று

தமிழிசை கருநாடக இசை ஆனதற்கு மற்றொரு காரணமும் ஈண்டுக் குறிப்பிடப் பெறுகிறது. “வட நாட்டவர் தென்னாட்டுப் பகுதிகள் அனைத்தையும் கருநாடகம் என்றே பொதுவாக அழைத்தனர். ஆற்காட்டிலிருந்த நவாபைக் ‘கர்நாடக நவாபு’ என்றே ஆங்கிலேயர் அழைத்தனர். அது போலவே தமிழக இசையைக் கருநாடக சங்கீதம் என்றனர். அது முதலாக இப்பெயரே நிலைத்துவிட்டது”. (உலகத் தமிழ்க் களஞ்சியம்(2018) முதல் தொகுதி, ப. 458).

கருநாடகம் என்றால் பழமையானது,  நாகரிகமற்றது என்றும் பொருளுண்டு. அப் பெயர் தென்னாட்டிலுள்ள ஒரு மாநிலத்தையும் குறிக்கும்.

இழிவைத் துடைக்கும் முயற்சிகள்

தமிழிசைக்கு ஏற்பட்ட இந்த இழிவைத் துடைக்கும் முயற்சி தன்மான உணர்வு கொண்டவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் தமிழிசை அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் (1859 -1919) ஆவார். நீள ஆராய்ந்து அவர் எழுதிய கர்ணாமிர்த சாகரம் என்ற 4 தொகுதிகள் கொண்ட 1346 பக்கங்களைக் கொண்ட நூலால்தான் தமிழிசை பற்றிப் புதைந்து கிடந்த உண்மைகள் வெளிவரலாயின. அப் பெருமகனார் தமிழிலேயே இசையைப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற குரலை எழுப்பியவர் முதல்முதலாக இந்தியாவிலுள்ள பெரும் இசை விற்பன்னர்களின் மாநாடைப் பலமுறை முன்னின்று நடத்தி இசைபற்றிய பல நுணுக்கமான கண்டுபிடிப்புகளை உலகிற்கு அளித்தவர்.

“சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைச் செய்திகள் கருநாடக இசையின் மூல  இலக்கணமென்றும் தமிழிசையே வடக்கே இந்துஸ்தானி சங்கீதமாயிற்று” என்றும் விளங்கியவர். [உலகத் தமிழ்க் களஞ்சியம் (2018) ப.215].

இன்னும் தொடரும் சிலப்பதிகார பாடமுறை

“முதலாம் நூற்றாண்டின் கடைசியில் அதாவது இற்றைக்குச் சுமார்1800 வருடங்களுக்கு முன் நடந்த கோவலன் சரித்திரத்தில் இளங்கோவடிகள் சங்கீத விசயமாய்ச் சொல்லும் சொற்பகுதியின் சாரத்தைக் காண்போமானால்,

பூர்வ தமிழ்  மக்களின் கானத்தின் உயர்வும், உலகத்தவர் எவரும் இன்னும் அறிந்து கொள்ளாத நுட்பங்களும், சொல்லப்படுகிறதை நாம் காண்போம். பூர்வ தமிழ் மக்கள் வழங்கிவந்த சிறந்த இசைத்தமிழின் விதிமுறைப்படியே தென்னிந்திய சங்கீதமென்றும் தற்காலத்தில் சொல்லும் கானமும் இருக்கிறதென்றும், அந் நுட்ப விதிகளை அறியாதிருந்தாலும் அம் முறைப்படியே நாளது வரையும் பாடிக்கொண்டிருக்கிறோமென்றும் நாம் அறியும் பொழுது மிகுந்த சந்தோசமடைகிறோம்”. (மு. ஆபிரகாம் பண்டிதர் (1917), கருணாமிர்த சாகரம் ப.7) என்னும் வரலாற்றுண்மை தமிழ் இசையின் சிறப்பைத் தெற்றென எடுத்துக் காட்டும் சான்றாகும்.

தமிழிசை ஒலித்த மேடை தீட்டான இழிந்த கதை

ஆபிரகாம் பண்டிதர் மேற்கொண்ட அரும் பெரும் முயற்சிக்குப் பின்னும் இழிவு நீங்கிவிடவில்லை. அதே பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்த ஒரு நிகழ்வு நம்மைத் தலைகுனிய வைக்கிறது. “தமிழகத்தின் திருவையாறு நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் தியாகையர் நினைவு இசை விழாவில் தெலுங்கு, கீர்தனைகளே பாடப்படுவது வழக்கம். அந்த ஆண்டின் விழாவில் கலந்து கொண்ட இசையரசு எம். எம். தண்டபாணி தேசிகர், தமிழில் பாடலைப் பாடினார். இதனைப் பொறாத மற்றைய பாடகர்கள் “விழா மேடை தீட்டாகிவிட்டது” என்றும் “இது  பெரிய அபச்சாரம்” என்றும் “இனி அந்த மேடையில் அமர்ந்து பாடமுடியாது” என்றும் கொதித்துக் கூச்சலிட்டனர். கடைசியில் மேடையைக் கழுவிப் ‘புனித’ப் படுத்திய பின்னரே பாடினர். [முரசு நெடுமாறன் மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் (1997), ப. 893].

இஃது எதனைக் காட்டுகிறது? தமிழைத் தாய்மொழியாய்க் கொண்ட ஒரு நாட்டில் அந்தமொழிப் பாடல் தீட்டு எனக் கொக்கரிக்கும்  வந்தேறிய மிகமிகச் சிறிய கூட்டத்தை இகழ்வதா? அடிமைகள்போல் அந்த இழிவைச் ‘சகித்துக்’ கொண்டிருந்த பெருங்கூட்டத்தை வெறுத்தொதுக்குவதா? நூற்றுக் கணக்கான அரிமாக்கள் – சிங்கங்கள் வாழ்ந்த காட்டில் ஒருசில நரிகள் அவற்றை அடக்கி ஆண்டது போன்றதுதான் இந்த நிகழ்வு. இங்குப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய

“வெட்கமில்லை வெட்கமில்லை – இதில்

யாருக்கும் வெட்கமில்லை”

என்ற பாடல் அடிகள்தாம் நினைவுக்கு வருகின்றன.

அண்ணாமலை அரசரின் அரும் பெரும் முயற்சி

செட்டிநாட்டு அரசர் சர் அண்ணாமலைச் செட்டியார்

எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டும் ‘துக்கடா துடுக்கர்’களின் செயலை முற்றாக முறியடிக்க முடியவில்லை. தமிழிசைக்கு ஏற்பட்டுவந்த இத்தகு இழிவுகளைக் கண்டு கொதித்தெழுந்தனர் சான்றோர். “அவர்களுள் தலையாயவர் செட்டிநாட்டு அரசர் சர் அண்ணாமலைச் செட்டியார் (சிதம்பரம்).

தில்லையில் அண்ணாமலை பல்கலைகழகம் நிறுவிய செட்டி நாட்டு அரசர், சென்னையில் அண்ணாமலை மன்றம் நிறுவி, தமிழிசை மறுமலர்ச்சிக்கு வித்திட்டார். 1941ஆம் ஆண்டு முதல் தமிழிசை இயக்கம் தொடங்கி நாடு முழுதும் தமிழிசை இயக்க மாநாடுகளையும் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தினார். தந்தை பெரியாரின் திராவிடர் கழகம், இந்த இயக்கத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கியது. மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், இராஜாஜி, கல்கி போன்ற அறிஞர் பெருமக்கள் எல்லாரும் இதனை ஆதரித்தனர். ஏழிசை மன்னர் எம். கே. தியாகராஜ பாகவதர், இசையரசு எம். எம். தண்டபாணி தேசிகர், இசைச் சித்தர் சி. எஸ். ஜெயராமன், இசைமணி சீர்காழி கோவிந்தராஜன், இசைக்குயில் எம். எல். வசந்தகுமாரி, ஏழிசைச் செல்வி கே. பி. சுந்தராம்பாள், குடந்தை சுல்தான் முதலாய பாட்டுக் குரல் வளம் நிறைந்த பாடகர்கள் எல்லாரும் தமிழிசை இயக்கத்தை ஆதரித்துத் தமிழில் பாடுவதே தங்கள்கொள்கை எனச் செயல்படுத்திக் காட்டினர்”. [முரசு நெடுமாறன், மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்(1997)ப.894].

தமிழிசை இயக்கத்தின் வெற்றிக்குப் பின்னர் தமிழிலேயே பாடும் முழு இசை நிகழ்ச்சிகள் நடைபெறலாயின. அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும்  அரசு இசைக் கல்லூரிகளிலும் தமிழ் மூலமே இசை கற்பிக்கப்பட்டு வருகிறது. சென்னை அண்ணாமலை மன்றத்தில் ஆண்டுதோறும் நடைபெறும்  இசைவிழாவில் தமிழிசை கோலோச்சுகிறது.

இதனைமட்டும் கொண்டு தமிழிசை முழுவிடுதலை அடைந்துவிட்டதெனக்  கூறிவிட முடியாது. இன்னும் ‘துக்கடாத் துடுக்கர்’களின் வன்செயல் ஒடுங்கவில்லை.

தமிழ்நாட்டில், பிறநாடுகளில் நடக்கும் பெரும்பாலான இசைப் பயிற்சிகள் கருநாடக இசை முறையிலேயே நடைபெற்று வருகின்றன.

அடுத்து:

“முதலாம் உலகத் தமிழிசை மாநாடு – ஒரு பரந்துபட்ட பார்வை” – முரசு நெடுமாறன் (பகுதி # 2)

“முதலாம் உலகத் தமிழிசை மாநாடு-ஒரு பரந்துபட்ட பார்வை” – முரசு நெடுமாறன் (பகுதி # 2)