கோலாலம்பூர் – அக்டோபர் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு பிரதமர் துன் மகாதீர் முகமட் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மலேசியர்கள் சகிப்புத் தன்மையுடன், அனைத்து வேறுபட்ட இனங்களையும், மதங்களையும் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வரும் காரணத்தால் இந்நாட்டில் பல்வேறு திருவிழாக்கள் அமைதியாகவும், நல்லிணக்க முறையிலும் கொண்டாடப்படும் சூழல் நிலவுகிறது எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மலேசியர்களிடையே சிறுவயது முதல் அவர்கள் பெரியவர்களாகும் வரை ஒற்றுமை வலியுறுத்தப்பட்டு வந்திருப்பதால், மலேசியா உருவான குறுகிய காலத்திலேயே நாடு தேசிய அளவில் வளர்ச்சியையும், செல்வச் செழிப்பையும் அடைந்திருக்கிறது என்றும் மகாதீர் தனது செய்தியில் தெரிவித்தார்.
“உலகின் பல நாடுகளில் இன்னும் இனப் பிரச்சனைகளும், அதிகாரப் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன – அதனால் பிரச்சனைகளும் நிலவுகின்றன. ஆனால், நமது நாடு துரித வளர்ச்சி கண்டிருப்பதோடு, இனங்களுக்கிடையே நிலவும் அணுக்கமான நல்லுறவுகளால் மக்களிடையேயும் மகிழ்ச்சி நிலவுகிறது” என்றும மகாதீர் குறிப்பிட்டார்.
உலக நாடுகளை உன்னிப்பாகப் பார்த்தால், நமது நாட்டைப் போல் பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், கலாச்சாரங்கள் கொண்ட எந்த நாடும், இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை துரித வளர்ச்சியை அமைதியான முறையில் அடைந்ததில்லை என்றும் தெரிவித்த மகாதீர், நமது எதிர்காலச் சந்ததியரும், இளைஞர்களும் வாழ்க்கையில் வெற்றியடைய ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு, ஒன்றாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தீபாவளியைக் கொண்டாடும் அனைத்து மலேசிய இந்துக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்ட மகாதீரும் அவரது துணைவியார் சித்தி ஹஸ்மா அலியும், மலேசியாவின் பாரம்பரியமான திறந்த இல்ல உபசரிப்புகள் இந்த ஆண்டும் தொடரும் என்றும் மலேசிய சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் பின்பற்றப்படும் என்றும் கூறினர்.
இதன் மூலம், அமைதியான முறையில் ஒருவருக்கொருவர் அன்போடு கலந்து பழகுவதோடு, உபசரிப்புகளில் பரிமாறப்படும் பல்வேறு உணவு வகைகளை சுவைத்து மகிழவும் அமைதியான முறையில் ஆரோக்கியமான நல்லுறவுகளை வளர்த்துக் கொள்ள முடியும் எனவும் பிரதமர் தம்பதியர் தங்களின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்தனர்.
தீபாவளியின் சித்தாந்தத்திற்கு ஏற்ப பொது நன்மைக்காக கெட்ட அம்சங்களை ஒழித்து நல்ல அம்சங்களை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும், என்றும் இந்தத் தீபாவளித் திருநாளைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
பிரதமர் துன் மகாதீர் வழங்கியிருக்கும் தீபாவளி வாழ்த்துச் செய்தியை காணொளி வடிவில் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: