இலண்டன் – பிரெக்சிட் விவகாரத்தில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருக்கும் பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் எதிர்வரும் டிசம்பர் 12-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
அதே வேளையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் திட்டத்தை ஒத்தி வைக்கும் தீர்மானத்திற்கு நாடாளுமன்றத்திலிருந்து ஆதரவையும் போரிஸ் ஜோன்சன் கோரியுள்ளார்.
எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவையும் தெரிந்து கொண்ட பின்னர்தான் இந்த விவகாரத்தில் ஒரு முடிவெடுப்பேன் என எதிர்க் கட்சித் தலைவரும் தொழிலாளர் கட்சியின் தலைவருமான ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என கெடு வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த இறுதித் தேதியை நீட்டிக்க வேண்டும் என போரிஸ் ஜோன்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.
650 உறுப்பினர்களைக் கொண்ட பிரிட்டனின் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலை நடத்துவதன் மூலம் சிக்கலில் இருக்கும் பிரெக்சிட் விவகாரத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவர போரிஸ் ஜோன்சன் திட்டமிட்டுள்ளார் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.