Home One Line P2 திரைவிமர்சனம் : “பிகில்” – பெண்கள் முன்னேற்றத்திற்கு விசில் பறக்க வைக்கும் படம்

திரைவிமர்சனம் : “பிகில்” – பெண்கள் முன்னேற்றத்திற்கு விசில் பறக்க வைக்கும் படம்

1711
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இயக்குநர் அட்லீயின் முந்தைய படங்கள் எல்லாம் 1980-ஆம் ஆண்டுகளில் வெளிவந்த, மக்களைக் கவர்ந்த சில படங்களின் கதை உள்ளடக்கங்களை ஆங்காங்கே எடுத்து, நேர்த்தியாகத் திரைக்கதை கோர்க்கப்பட்ட திரைப்படங்கள் என்ற குற்றச்சாட்டுகள் நிறையவே எழுந்தன. கதை திருட்டு என்ற புகார்களும் இருக்கவே செய்தன.

ஆனால், தனக்கும் அசலாக சிந்திக்க வரும் என அட்லீ நிரூபித்திருக்கும் படம் “பிகில்”. இந்தியில் வெளிவந்த ‘சக்டே இந்தியா’  என்ற ஷாருக்கான் படத்தின் தாக்கங்கள் ஆங்காங்கே இருந்தாலும், முழுக்க முழுக்க, தமிழ் நாட்டுப் பெண்களின் பிரச்சனைகள், தமிழர்களின் சிந்தனைகளில் நிலவும் குறைபாடுகள், ஆகியவற்றோடு, காற்பந்து விளையாட்டையும் பின்னிப் பிணைந்து மண்ணின் மணம் மணக்க, மணக்க திரைக்கதையைப் பின்னியிருக்கிறார். பெண் விவகாரங்களில் தமிழர்களின் எண்ணப் போக்கை பல இடங்களில் சவுக்கடி கொடுத்து சாடியும் இருக்கிறார்.

கதை – திரைக்கதை                       

வழக்கமான தமிழ்ப்படங்களுக்கே உரிய சம்பவங்களோடு தொடங்குகிறது படம். பள்ளி நிலத்தை கல்வி அமைச்சர் ஆக்கிரமிக்க முயற்சிகள் எடுக்க, அதைத் தடுக்க மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் – ஆர்ப்பாட்டங்களை முறியடிக்க ரவுடிகளை போலீஸ்காரர்களாக கூட்டத்திற்குள் நுழைத்து தாக்குதல்கள் நடத்த – மாணவர்கள் பாதுகாப்புக்காக மைக்கல் ராயப்பன் – அதாவது விஜய்யின் வட்டாரத்திற்குள் நுழைய – சண்டைக் காட்சிகளோடு ஆரம்பமாகிறது கதை.

#TamilSchoolmychoice

தமிழ் நாட்டுப் பெண்கள் காற்பந்துக் குழுவோடு, அதன் பயிற்சியாளராக, விஜய்யின் பழைய நண்பன் கதிர் அந்த வட்டாரத்தில் வந்து சேர, அப்போது விஜய் மீது நடத்தப்படும் தாக்குதலில் எதிர்பாராதவிதமாக கடுமையான காயங்களுக்கு இலக்காகிறார் கதிர். கதிருக்குப் பதிலாக பெண்கள் காற்பந்து குழுவின் பயிற்சியாளராக விஜய் பொறுப்பேற்றுக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படும்போது அவருடைய பின்புலம் காட்டப்படுகிறது.

தடாலென இன்னொரு தளத்திற்கு எகிறுகிறது கதை. பின்தங்கிய அந்த வட்டார மக்களை காற்பந்து விளையாட்டின் மூலம் கரைசேர்க்க மகன் பிகில் என்ற மைக்கல் ராயப்பனாக – விஜய் எடுக்கும் முயற்சிகள், அப்பா ராயப்பன் அவருக்கு உதவியாக இருப்பது என விரியும் கதையில், அப்பா கண்ட கனவுகளை நிறைவேற்றாமல், அவரது பாதையிலேயே கத்தியைத் தூக்கும் அவல நிலைக்குத் தள்ளப்படுகிறார் விஜய்.

அந்த வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பமாக, கதிருக்கு ஏற்பட்ட நிலைமையால் பெண்கள் காற்பந்து குழுவின் பயிற்சியாளராக புதுடில்லி வரை செல்லும் விஜய் சந்திக்கும் ஏகப்பட்ட இடர்ப்பாடுகள் – அவற்றுக்கு அவர் தீர்வு காணும் விதம் – பின்னணியில் இருந்து இயக்கும் வில்லன் யார் என்ற முடிச்சுகள் அவிழ்க்கப்படுவது – அந்த வில்லனுக்கு எதிராக இறுதியில் விஜய் எத்தகைய அதிரடிகளை நடத்துகிறார் என சுவைபடச் சொல்லியிருக்கிறார் அட்லீ.

விஜய்யுடன் கதிர்

அவருக்கு திரைக்கதை வசனங்களில் உதவியிருப்பவர் ரமணகிரிவாசன்.

கதையும் சம்பவங்களும், சினிமாத்தனமாகவும், ஹீரோத்தனமாகவும் இருந்தாலும், லாஜிக் எனப்படும் தர்க்க ரீதியாக நம்ப முடியாதவைகளாக இருந்தாலும் புதிது புதிதாகச் சிந்தித்திருக்கிறார் அட்லீ.

அதற்கேற்ப, அவரது மைக்கல் ராயப்பன் கதாநாயகனை, ஆக்ரோஷம், வெறித்தனம், நகைச்சுவை, கிண்டல் கேலி, காதல், நடனம் என தனது தனிப்பட்ட திறன்களால் செதுக்கியிருக்கிறார் விஜய்.

நடிப்பும் – மற்ற நடிகர்களும்…

ராயப்பனாக வரும் அப்பா விஜய் வயதான தோற்றத்தில் லேசான திக்குவாய் குளறல் பேச்சோடு அசத்துகிறார். உடல்மொழியும், வசனங்களைக் குரல் மாற்றி உச்சரித்திருக்கும் விதமும் கவர்கிறது.

நயன்தாராவுக்கு அவ்வளவு வேலை இல்லை என்றாலும், பிசியோதெராபிஸ்ட் எனப்படும் விளையாட்டாளர்களுக்கான தசைவலி நிவாரண நிபுணர் என்ற வகையில் கதையோடு பாந்தமாகப் பொருந்துகிறார். அழகழான ஆடைகளோடு வந்து அழகு காட்டுவதோடு, விஜய்யுடன் நடத்தும் காதலையும் இரசிக்கும்படி செய்திருக்கிறார்.

இடைவேளைக்குப் பின்னர் காதல் பாடல் போட்டு எரிச்சல் பட வைக்காமல், எல்லோரும் ஆடும் நடனக் காட்சி ஒன்றைப் புகுத்தியிருக்கிறார்கள். அந்தப் பாடலுக்கான அசத்தலான இசைக் கோர்வையை பாடல் இல்லாமல் ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கியிருக்க, எல்லா நடிகர்களும் இணைந்து நடனமாடியிருப்பது நல்ல விருந்து.

கதிர் கச்சிதமான தேர்வு. இன்னும் ஏராளமான நடிகர்கள் பட்டாளமும் இருக்கிறார்கள். ஆனந்தராஜ், யோகிபாபு, விவேக், ரோகிணி, ஞானசம்பந்தன் என பலர் இருந்தாலும் அவர்களில் வழக்கம்போல் தனித்து நிற்பவர் யோகிபாபு. தனது பதிலடிகளால் திரையரங்கை அதிர வைக்கிறார்.

வில்லனாக வரும் டேனியல் பாலாஜி தனது நீண்ட முடி, மிரட்டும் கண்கள், உடல் மொழியால் சரியான வில்லனாக விஜய்க்குப் பொருந்துகிறார்.

கவரும் மற்ற அம்சங்கள்

படம் முழுக்க அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டம், ரஹ்மானின் பின்னணி இசை, சிறப்பான பாடல்கள், இளம் விளையாட்டாளராக விஜய் காற்பந்து அரங்கில் பாய்ந்து, பாய்ந்து கோல் அடிப்பது, அதே ஸ்டைலில் அதிரடியான சண்டைக் காட்சிகள், என அனைத்துமே கவரும் அம்சங்கள்.

இறுதியில் வரும் சின்னச் சின்னக் காட்சிகளில் கதையின் சில முடிவுகளை வைத்திருப்பதும் கவர்கிறது.

இடைவேளைக்குப் பின்னர் எங்கே இனி மிச்ச படம் முழுவதையும் காற்பந்து அரங்கையே காட்டி அறுத்து விடுவார்களோ என நாம் பயந்து கொண்டிருக்கும்போது, இன்னும் இரண்டு முக்கிய பெண் விளையாட்டாளர்கள் தேவை என அவர்களைத் தேடி விஜய் செல்வதும், அந்த இரண்டுப் பெண்களின் கதைகளில் தமிழ் நாட்டுப் பெண்களின் ஏறத்தாழ ஒட்டுமொத்தப் பிரச்சனைகளையும் விவாதித்திருப்பதும் படத்தின் போக்கையே திசை திருப்புகிறது.

பாடல் பதிவின்போது இயக்குநர் அட்லீ, பாடலாசிரியர் விவேக், விஜய், ஏ.ஆர்.ரஹ்மான்

ரஹ்மான் இசையில், சிங்கப் பெண்ணே பாடல் படமாக்கப்பட்டிருக்கும் விதமும் முத்திரை பதிக்கிறது. மற்ற பாடல்களிலும், பின்னணி இசையிலும் ரசிக்க வைக்கிறார் ரஹ்மான். பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு, பட்டி தொட்டிகளில் முழக்கமிட்டுக் கொண்டிருக்கின்றன.

மொத்தத்தில் விஜய்க்கான படம் என்றாலும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசிய விதத்திலும், பேசுவதோடு நில்லாமல், அதற்கான தீர்வுகளை நோக்கிக் கதைக் களத்தை நகர்த்திச் சென்ற விதத்திலும் ‘பிகிலுக்கு’ தாராளமாக விசிலடிக்கலாம்.

தீபாவளிக்கு ஏற்ற திரைவிருந்து!

-இரா.முத்தரசன்