Home One Line P1 “மலேசியாவில் படைப்பிலக்கியம் தேக்க நிலையில் உள்ளதா? ” – முரசு நெடுமாறன் உரைகுறித்த டாக்டர் சனனி...

“மலேசியாவில் படைப்பிலக்கியம் தேக்க நிலையில் உள்ளதா? ” – முரசு நெடுமாறன் உரைகுறித்த டாக்டர் சனனி பூபாலனின் பார்வை

1613
0
SHARE
Ad
முனைவர் முரசு நெடுமாறன் – முனைவர் மனோன்மணி தேவி

(கடந்த 11.10.2019-ஆம் நாள் தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரீசு கல்வியியல் பல்கலைகழகத்தில் புலம் பெயர்ந்தோர் தமிழிலக்கிய மூன்றாம் பன்நாட்டு மாநாடு நடந்தது.  அந்த மாநாட்டில் மூத்த கவிஞர் முரசு நெடுமாறன் “படைப்பிலக்கிய முயற்சியில் மலேசியத் தமிழர்” என்ற தலைப்பில் கட்டுரை படைத்தார். அந்த கட்டுரை குறித்த தனது பார்வையை வழங்குகிறார் டாக்டர் சனனி பூபாலன்)

கடந்த 11.10.2019-ஆம் நாள்  தஞ்சோங்மாலிம் சுல்தான் இட்ரீசு கல்வியியல் பல்கலைகழகத்தில் “புலம் பெயர்ந்தோர் தமிழிலக்கிய மூன்றாம் பன்நாட்டு மாநாடு” அந்தப் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் முனைவர் மனோன்மணிதேவி தலைமையில் நடந்தேறியது.

அம்மாநாட்டில் மலேசியாவின் பழம்பெரும் கவிஞரும் ஆய்வாளருமான முனைவர் முரசு நெடுமாறன், மையநோக்குரை (Keynote Address) நிகழ்த்தினார். ஒருமணி நேரம் நிகழ்த்தப்பட்ட அந்த உரையைக் கேட்கும் அரியவாய்ப்பைப் பெற்றேன். அது குறித்த ஒரு பரவலான பார்வையே இக்கட்டுரை.

கட்டுரையாளர் – சனனி பூபாலன்
#TamilSchoolmychoice

எதனையும் சிறப்பாகச் செய்யும் திறத்தவர் என்று பெயர் பெற்ற முனைவர் முரசு நெடுமாறன், உலகில் நடந்த பல  மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகள் படைத்தவர். அந்த அனுபவ முதிர்ச்சி அவர் கட்டுரையில் வெளிப்பட்டது.

“படைப்பிலக்கிய முயற்சியில் மலேசியத் தமிழர்” என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையில்  மலேசியக் கவிதை, நாவல், சிறுகதை, சிறுவர் இலக்கியம்  என்று  மிகப் பரந்த அளவில் அமைந்திருந்தது. ஒவ்வொரு இலக்கிய  வகையின் தோற்றம், வளர்ச்சியை அவர் சான்றுகளுடன் எடுத்துரைத்தார். அத்துறை வளர்ச்சிக்குக் காரணமாய் இருந்தவர்களையும் மறவாமல் குறிப்பிட்டார். இது உள்நாட்டுப் பேராளர்களுக்கு மட்டும் அல்லாமல் அயலகப் பேராளர்களும் மலேசியத் தமிழ் இலக்கியத்தைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளும் வண்ணம் சிறப்பாக அமைந்திருந்தது. குறிப்பாக தமிழகத்திலிருந்து வந்திருந்த பெரும் அறிஞர் பெருமக்கள் கட்டுரையை வெகுவாகப் பாராட்டினர்.

கட்டுரை படைப்புப்பற்றி இங்கு இன்னொன்றையும் சொல்ல வேண்டும். கட்டுரையாளர் உரையை எழுதி வைத்துக் கொண்டு வெறுமனே வாசிக்கவில்லை. அழகிய மண்டபத்தின் அகன்ற பெருந் திரைகளில் ஆய்வுக் குறிப்புகள் இடம் பெறுமாறு ‘பவர்பாயிண்ட்’ மென்பொருள் உதவியோடு பேராளர்கள் படித்துப்புரிந்து கொள்ளுமாறும் செய்திருந்தார். திரையில் தெரிந்த கவிதைகளை உணர்வு நலத்துடன் வாசித்துக் காட்டினார்.  சில  கவிதை அடிகளை வாசித்து  விளக்கிய போது அக் கவிதை – பாடல் உணர்ச்சியில் கலந்து அழுதும் விட்டார்.

இப்படி உணர்ச்சியை வெளிப்படுத்துவது ஆய்வாளர் செய்யக்கூடாத ஒன்று எனினும், இதற்கு அவரே காரணத்தைக் கூறினார்.  “நான் ஆய்வாளன் என்பதோடு உணர்வு நலம் மிக்க படைப்பாளனும் கூட. அதனால் என்னை மறந்து கவிதையில் ஒன்றிவிடும் தன்மை கொண்டவன். பொறுத்தருள வேண்டுகிறேன்” என்று விளக்கினார்.

கணினித் திரையில் உரைக் குறிப்புகளை மட்டும் அவர் காட்டவில்லை.  பாடல்களை இசையோடு  ஒலிக்கச் செய்தும், அதற்குரிய காணொளிக் காட்சிகளையும் இடம்  பெறச் செய்தமை  ஒரு  திரைப்படம்  பார்ப்பது போன்று இருந்தது. அண்மையில் மறைந்த பொன் மகேந்திரன் பாடல், மு. நெ. இளவரசு இசையில்  திரைப்பாடகர் டி. எல். மகராஜன்  குரலில் கம்பீரமாக ஒலித்தது. மிக  அண்மையில் மறைந்த அக்கினி சுகுமாரனின் இசைப்பாடல் அடிகள் அவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதுபோல் அமைந்தன.

‘கண்ணீரே சொல்லு கதை’ என்று தொடங்கிய பாடகி அல்லிமலர் மனோகரன் குரவில் ஒலித்த பாடலும் அதற்கான காணொளிக் காட்சிகளும் ஒரு தோட்டப்புறத்தையே – இரப்பர்மரக் காட்டையே திரையில் காட்டின. அந்தப் பாடலில் தேங்கியிருந்த சோக வரலாறும் அதை எடுத்து விளக்கிய கட்டுரையாளர் உரையும் கண்ணீரை வரவழைத்தன.

கணினித் திரையில் ஒலித்த சிறுவர் படைப்புகள் பற்றியும் இங்குக் குறிப்பிட்டே ஆக  வேண்டும்.  ஆய்வாளர் பாப்பாவின் பாவலர் ஆதலால் அந்தப் பகுதி மிகவும் சிறப்பாக அமைந்தது. அதில் மூன்று பாடல்கள் மட்டுமே இடம் பெற்றன. ஆசிரியர் கற்பிக்கும் பொழுது இசைப் பாடல்கள் எப்படி உதவுகின்றன என்பதனை விளக்கும் வகையில் அவரின் அனுபவத்தை அப்படியே எடுத்துரைத்தார். பாட்டில் அடங்கி இருந்த நாடகப் பாங்கினையும் அவர் விளக்கினார்.

“பள்ளிகளில் குறிப்பாகத்  தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கற்பிக்கும்  பொழுது ‘இயல்’ தமிழ் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது. இசைத் தமிழும்  நாடகத் தமிழும் சேர்ந்தால்தான் அது முழுமையான தமிழ்க்கல்வி” என்று ஆய்வாளர்  தெளிவு படுத்தினார்.

ஆய்வாளர் நிறைவுரை கூறிய பொழுதும், பரிந்துரை வழங்கிய போதும் சொன்ன கருத்துகள் நம்  சிந்தனைக்கு உரியனவாகும்.

“அண்மைக் காலமாக இங்குப் படைப்பிலக்கியத்துறையில் ஒரு சோர்வு ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது.  பழம்பெரும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், பெரும் அளவில் உலக வாழ்வு நீத்துவிட்டனர். புதியவர்களில் ஒரு சிலரே நம்பிக்கை ஊட்டும் படைப்புகளை நல்கி வருகின்றனர்” என நான்கே வரிகளிகளில் இப்போதைய நிலையை ஆய்வாளர் எடுத்துக்காட்டினார். இக் கருத்தை மறு  உறுதிப்படுத்தும் வண்ணம் 20.10.2019ஆம்  நாள் தமிழ்மலர் நாளிதழின் இணைப்பான ஞாயிறு மலரில், “இப்பொழுது அத்துறை (இசைப்பாடல் புனைதல்) வெறிச்சோடிக் கிடக்கிறது” என்கிறார். தேக்க நிலையை எடுத்துக் காட்டிய ஆய்வாளர் தீர்வுக்கும் வழிகாட்டத் தவறவில்லை.

“இப்பொழுது தமிழ்க் கல்வி தொடக்க, இடைநிலை, கல்லூரி, உயர்நிலை, பல்கலைக்கழகம் வரை தொடர்கிறது.  முன்பு இல்லாத தமிழ்ச் சூழல் இப்பொழுது வாய்த்துள்ளது. உயரிய பரிசுத் திட்டங்களும் பல உள. இலக்கியப் படைப்பாக்கத் துறையில் ஓர் உயிர்ப்பை ஏற்படுத்தும் வழிகளைச் சமுதாய, கலை, இலக்கிய அரசியல் அமைப்புகள் ஆராய்ந்து  தக்கன செய்ய முன் வர வேண்டும் குறிப்பாக எழுத்தாளர்களை உறுப்பினர்களாய்க் கொண்ட அமைப்புகள்  இத் துறையில் கருத்துச்  செலுத்தி உரியன செய்தருள  முனைப்புக்  காட்டுதல் வேண்டும்.”

ஆய்வாளரின் பரிந்துரை  செயல்பாட்டிற்கு  வந்தால் நல்ல நிலை மலரும் என்பதில்  ஐயமில்லை. இக்  கட்டுரை விமர்சன நோக்கினது ஆகையால் சில  குறைகளையும் சுட்டிக் காட்ட வேண்டும். கட்டுரையாளர் தம்  படைப்பை வழங்க மேடைக்கு வந்து பேசத்தொடங்கினார். தொடக்கத்திலேயே பவர்பாய்ண்ட் படைப்புகள் திரையில் சரியாக விழவில்லை. எழுத்துகளும் காணொளிக் காட்சிகளும் அலங்கோலமாயின. “என்ன ஆயிற்று?” என்று ஆய்வாளர் உரத்த குரல் எழுப்பினார். உடனே தொழில் நுட்பர் ஓடிவந்து ஏதேதோ செய்தும் சரிப்படவில்லை. நல்ல வேளையாக மற்றோர் ஆய்வாளர் கொண்டு வந்திருந்த மடிக்கணினி உதவிற்று. ஆனால் அதில் காணொளி இயங்கவில்லை. எங்ஙனமோ மாற்றிமாற்றிப் போராடி எழுத்துகளும் காணொளிக் காட்சிகளும் திரையில் தெரியும் வண்ணம் கணினிக்கலை அறிந்தவர்கள் சரிப்படுத்தினர்.  அதனால் சிறிது நேரம் வீணாயிற்று. உலக மாநாடுகளில் இது போன்ற குறைகள் நேரா வண்ணம் முன் கூட்டியே எல்லாவற்றையும் சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும்.

கல்வியியல் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த உலகளாவிய மாநாட்டில் ஒருசில நாடுகளைச் சேர்ந்த மிகக் குறைவானவர்களே பங்கு கொண்டனர். பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் நிறைவாகக் கலந்து கொண்டால்தான் புலம் பெயர் நாடுகளைப் பற்றிப் பரவலாக அறிந்து கொள்ளமுடியும். எனினும் மற்ற ஏற்பாடுகளைச் செய்திருந்த முனைவர் மனோன்மணிதேவி தலைமையிலான செயலவையைப்  பாராட்டுவதும் நம் கடமையாகும்.

கட்டுரை அரங்கத்திற்குத் தலைமை ஏற்ற முனைவர் மலர்விழி சின்னையாவும் ஆய்வாளரை அறிமுகப்படுத்திய முனைவர் தனலட்சுமி பெருமாள் ஆகியோரும் கச்சிதமாக அரங்கை நடத்தினர். பொதுவாக அனைத்து நிகழ்வுகளும் குறித்த நேரத்தில் தொடங்கிக் குறித்த நேரத்தில் நிறைவுற்றமை பாராட்டிற் குரியதாகும்.

-டாக்டர் சனனி பூபாலன்