கோலாலம்பூர்: ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்கான பணி மத்திய அரசின் பொறுப்பு மட்டும் அல்ல என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கூறியுள்ளார்.
தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கும், நாட்டின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் அடிமட்டத்தில் ஈடுபாட்டை ஊக்குவிக்கவும் பலப்படுத்தவும் வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
“மலேசியா பல கலாச்சார நாடு. பல்வேறு மதம், மொழி மற்றும் பழக்கவழக்கங்கள் பல தலைமுறைகளாக மரபுரிமையாக இங்கு உள்ளன. இந்த பன்முகத்தன்மை ஒரு தனித்துவமாகும். இது பெருமையுடன் உணரப்பட வேண்டும். இந்த முன்னேற்றம்தான் மலேசியாவை அனைத்துலக சமூகத்தால் எப்போதும் பின்பற்றப்படும் ஒரு நாடாக மாற்றியுள்ளது என்பதை நாம் நிரூபிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
உறுதியான அடித்தளத்தை அங்கீகரிப்பதன் மூலம் நாட்டின் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்ய முடியும் என்பதால், அடிமட்ட மக்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் இன்றும், எப்போதும் உறுதிபூண்டுள்ளது என்று வேதமூர்த்தி தெரிவித்தார்.
“எடுத்துக்காட்டாக, தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறைக்கான அமைச்சர் பதவியினை வகித்ததிலிருந்து, எனது பொறுப்பின் கீழ் அனைத்து நிறுவனங்களுக்கும் மிகவும் வெளிப்படையான அரசாங்க கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.”
“ஜாகோவா (பழங்குடியின மேம்பாட்டுத் துறை) போன்ற கொள்கை திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலில், பழங்குடி மக்களின் நேரடி ஈடுபாட்டின் மூலம் வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
குறிப்பாக வளத்தை இணைந்து பகிரும் 2030 இலக்கை அடைவதில், மக்களின் ஈடுபாட்டை உறுதி செய்வதற்காக பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், அடித்தளங்களை உருவாக்குவதற்கும் கவனம் செலுத்தும் கொள்கைகளைத் திட்டமிட்டு செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.