கோலாலம்பூர்: தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் மீதான சமீபத்திய ஒடுக்குமுறை சர்ச்சைக்குரிய போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் இந்நாட்டில் இருப்பதால் நிகழ்ந்திருக்கலாம் என்று பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தற்போது, செயல்படாத இலங்கை போராளிக்குழு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்ற கருத்து வேறு சில காரணங்களுக்காக எழுப்பப்பட்டது என்று அவர் கூறினார்.
ஜசெகவை தவறான கண்ணோட்டத்தோடு காண்பிக்கும் ஆழ்ந்த நிலை நடவடிக்கைக்கும் இது தொடர்புடையது என்று அவர் கூறினார்.
இந்திய அரசாங்கத்திடமிருந்து தப்பி ஓடி வந்த ஜாகிர் நாயக் இல்லையென்றால் இந்த விவகாரம் தலைத்தூக்கி இருக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
“ஜாகிர் நாயக்கிற்கு எதிரான எதிர்ப்பை ஒடுக்குவதற்கான நடவடிக்கை இது.” என்று சதீஸ் கூறினார்.
விடுதலைப் புலிகள் உடனான தொடர்புகள் தொடர்பாக ஜசெக குறிவைக்கப்படவில்லை என்று அண்மையில் உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் மறுத்தார். பயங்கரவாத குழுவுடன் தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அக்கட்சியில் இருந்து வந்தவர்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த மாத தொடக்கத்தில், இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட மூன்று ஜசெக உறுப்பினர்கள் மீது பயங்கரவாத தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கிடையில், 12 நபர்களுக்கு எதிரான காவல் துறையின் குற்றச்சாட்டுகளுக்கு ஒப்புதல் அளித்ததற்காக அரசாங்க தலைமை வழகக்கறிஞர் அலுவலகத்தை சதீஸ் சாடினார்.
ஐரோப்பிய ஒன்றியம், பல ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பட்டியலில் இருந்து நீக்கியதை அவர் குறிப்பிட்டார். மேலும், பயங்கரவாதம் குறித்த சமீபத்திய அறிக்கையில் இந்த குழுவை சாத்தியமான அச்சுறுத்தலாக அமெரிக்கா அடையாளம் காணவில்லை என்றும் அவர் கூறினார்.