Home One Line P1 அரசியல் பார்வை: தஞ்சோங் பியாய் – மசீசவின் இரண்டாவது நாடாளுமன்றத் தொகுதியாகுமா?

அரசியல் பார்வை: தஞ்சோங் பியாய் – மசீசவின் இரண்டாவது நாடாளுமன்றத் தொகுதியாகுமா?

821
0
SHARE
Ad

(தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில், மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதியில், தேசிய முன்னணி சார்பில் மசீசவின் சீன வேட்பாளரை நிறுத்தியது சரியான வியூகமா? ஒரே நாடாளுமன்றத் தொகுதியைக் கொண்டிருக்கும் மசீசவுக்கு தஞ்சோங் பியாய் இரண்டாவது நாடாளுமன்றத் தொகுதியாகுமா? செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் அரசியல் பார்வை)

14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சில சுவாரசியங்களுடன், மலேசியாவுக்கே உரித்தான சில அரசியல் முரண்பாடுகளுடன் அரங்கேறுகிறது தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல்.

நேற்று வரை மலாய் ஒற்றுமை – மலாய் கூட்டணி என்று பேசி வந்த அம்னோவும், பாஸ் கட்சியும் அந்தர் பல்டி அடித்து, பெரும்பான்மை மலாய்க்காரர்களைக் கொண்ட தொகுதியில் மசீச சீன வேட்பாளரை நிறுத்துவதற்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன.

#TamilSchoolmychoice

எங்கள் வேட்பாளரை ஏற்றுக் கொள்ளாவிட்டால், தேசிய முன்னணியிலிருந்தே வெளியேறுவோம் – அல்லது சுயேச்சையாகக் கூடப் போட்டியிடுவோம் என மசீச தேசிய முன்னணி தலைமைத்துவத்திற்கு கடும் நெருக்குதல் தந்ததாகக் கூட வதந்திகள் உலவுகின்றன.

தஞ்சோங் பியாய் தொகுதி மீண்டும் மசீசவுக்கே தரப்பட வேண்டும் என உறுதிபட முதன் முதலில் அறைகூவல் விடுத்தவர் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்தான்!

பெரும்பான்மை மலாய்க்காரர்களைக் கொண்ட அரசியலை அம்னோவும், பாஸ் கட்சியும் முன்னெடுக்கின்றன என்று சாடிய நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் பெர்சாத்து சார்பில் மலாய் வேட்பாளரை களமிறக்க, தேசிய முன்னணியோ, தனது பழைய கொள்கையின்படி அந்தத் தொகுதியை மசீசவுக்கே விட்டுக் கொடுத்து, அதற்கு பாஸ் ஆதரவு தெரிவித்திருக்கும் அரசியல் மாற்றம் தஞ்சோங் பியாய் மூலம் நிகழ்ந்திருக்கிறது.

தனது வியூகத்தால் நம்பிக்கைக் கூட்டணியை ஏமாற்றிய தேசிய முன்னணி

ஆறுமுனைப் போட்டியில் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தல்

தேசிய முன்னணி எடுத்த எடுப்பிலேயே இரண்டு விதங்களில் நம்பிக்கைக் கூட்டணியை தனது வியூகத்தால் ஏமாற்றியது எனலாம்.

முதலாவது, கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி எங்களின் வேட்பாளரை அறிவிப்போம் என்றது தேசிய முன்னணி. அதைப் பார்த்து அதே நாளில் தங்களின் வேட்பாளரை முன்கூட்டியே அன்றைய தினத்திலேயே நம்பிக்கைக் கூட்டணியும் அறிவித்தது.

இதன் மூலம் அங்கு பெர்சாத்து வேட்பாளர் – அதுவும் ஒரு மலாய்க்காரர் – நிறுத்தப்படுகிறார் என்பதை தேசிய முன்னணி முன்கூட்டியே சாமர்த்தியமாக தெரிந்து கொண்டது. ஆனால், தனது வேட்பாளரை முன்கூட்டியே அறிவித்தபடி அதே அக்டோபர் 28-ஆம் தேதி தேசிய முன்னணி அறிவிக்கவில்லை.

இது ஒரு சாமர்த்தியமான அரசியல் வியூகமாகப் பார்க்கப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்தே தனது வேட்பாளரை அறிவித்தது தேசிய முன்னணி.

2018 பொதுத் தேர்தல் – தஞ்சோங் பியாய் முடிவுகள்

தேசிய முன்னணியின் இரண்டாவது வெற்றி வியூகம், ஆரம்பம் முதல் அம்னோ தஞ்சோங் பியாய் தொகுதியை எடுத்துக் கொள்ளும், அங்கு மலாய் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இறுதி நேரத்தில் மசீசவுக்கே விட்டுக் கொடுத்து, அதற்காக பாஸ் கட்சியின் ஆதரவையும் பெற்று, சடாரென தஞ்சோங் பியாய் அரசியல் களத்தை மாற்றியமைத்தது.

முதலில் அறிவிக்கப்பட்ட நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் கர்மாயின் சார்டினியின் வயது எடுத்த எடுப்பிலேயே எதிர்மறையான விமர்சனங்களைக் கொண்டு வந்தது.

மசீச வேட்பாளருடன் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்

மாரடைப்பால் காலமான முன்னாள் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் பாரிட் 42 வயதுக்காரர். அந்த இளம் வயதிலேயே அவரே இறந்து விட்ட நிலையில் கொண்டுவரப்பட்ட இடைத் தேர்தலில் 66 வயதான வேட்பாளரை நிறுத்தியது வியூக ரீதியாக பெர்சாத்து செய்த முதல் தவறு.

ஒருவரின் வயதை வைத்து விமர்சிப்பதும், அந்த வயதைச் சுட்டிக் காட்டி அதனால் அவர் சீக்கிரம் இறந்து விடுவார் என்று கூறுவதும் நாகரிகமற்ற அரசியல் என்றாலும், தனது 42 வயது நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த நிலையில் அவருக்குப் பதிலாக 66 வயது வேட்பாளரை – அதுவும் இடைத் தேர்தலில் நிறுத்துவது கண்டிப்பாக எதிர்மறை விமர்சனங்களை எழுப்பும் என்பதை பெர்சாத்து உணர்ந்திருக்க வேண்டும்.

அடுத்த இரண்டு நாட்களில் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரின் வயது காரணமாக அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பரப்புரைகளால் அவரது உத்வேகம் சற்றே பின்னடைவை எதிர்நோக்கியது எனலாம்.

அனுபவப்பட்ட மசீச வேட்பாளர்

கர்மாயின் – வீ ஜெக் செங்

கடந்த காலங்களில் தஞ்சோங் பியாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரையே – கடந்த பொதுத் தேர்தலில் வெறும் 524 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்றவரையே – மீண்டும் வேட்பாளராக்கியிருப்பதன் மூலம் இரண்டு முனைகளில் மசீச பெர்சாத்து வேட்பாளரை முந்திக் கொண்டு விட்டது.

முதலாவது, பெர்சாத்து வேட்பாளரை விட எங்கள் வேட்பாளர் இளமையானவர் என்பது!

இரண்டாவது, ஏற்கனவே இந்தத் தொகுதியில் பணியாற்றிய அனுபவசாலி – தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர் – பிரச்சனைகளை அறிந்தவர் – என்ற பரப்புரையை எளிதாக முன்னெடுக்கும் வண்ணம் பழைய வேட்பாளரையே நிறுத்தியது.

இவை தவிர சீன சமூகத்திற்கு இன்னொரு சவாலையும் மசீச முன்வைத்துள்ளது. மலாய் அரசியல் பேசும் பெர்சாத்து கட்சி – மலாய் தன்மான மாநாட்டில் பங்கு பெற்ற அதன் தலைவர் துன் மகாதீர் – இவர்களுக்காக வாக்களிக்கப் போகிறீர்களா அல்லது உங்களின் சொந்த இன வேட்பாளருக்கு வாக்களிக்கப் போகிறீர்களா – என்பதுதான் அந்த சவால்!

முதல் கட்டப் பிரச்சாரங்களில் மசீசவின் பரப்புரைகளுக்குக் கணிசமான சீன வாக்காளர்கள் – அதிலும் நடுத்தர வயதுக்காரர்கள் – பெருமளவில் திரள்கிறார்கள் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

42 விழுக்காட்டு சீன வாக்காளர்களைக் கொண்டது தஞ்சோங் பியாய். நம்பிக்கைக் கூட்டணி மீது வளர்ந்து வரும் அதிருப்தி, ஜசெக மீது தேய்ந்து வரும் அபிமானம் – இவை காரணமாக, நம்பிக்கைக் கூட்டணிக்கும் அதன் அங்கத்துவக் கட்சியான ஜசெகவுக்கும் பாடம் போதிக்கும் வகையில் கணிசமான சீனர்கள், தங்களின் சொந்த இன வேட்பாளருக்கே வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு விழுந்த சீன வாக்குகளில் ஆயிரம் இரண்டாயிரம் வாக்குகள் – இப்போது மசீச பக்கம் சாய்ந்தாலே போதும் – தேசிய முன்னணி அபாரமான வெற்றியைப் பெற்றுவிடும்.

ஆக, மேற்கூறப்பட்ட காரணங்களால் மசீச வேட்பாளரே தற்போது இடைத் தேர்தல் களத்தில் முன்னணியில் நிற்கிறார் என்பது அரசியல் பார்வையாளர்களின் பொதுவான பார்வையாக இருக்கிறது.

ஜோகூர் ஆயர் ஈத்தாம் தொகுதியில் 2018-இல் மசீச தேசியத் தலைவர் வீ கா சியோங், சொற்ப வாக்குகளில் வென்றதன் மூலம், அந்த ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியை மட்டும் தற்போது கொண்டிருக்கும் மசீச தஞ்சோங் பியாய் தொகுதியையும் வென்று நாடாளுமன்றத்தில் தனது எண்ணிக்கையை இரண்டாக உயர்த்திக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பாஸ் கட்சியின் ஆதரவு கூடுதல் பலம்

தேசிய முன்னணியின் நீலவண்ண ஆடைகளோடு இரண்டறக் கலந்து ஆதரவு தரும் பச்சை நிற ஆடைகள் கொண்ட பாஸ் தலைவர்கள்

2018 பொதுத் தேர்தலில் பாஸ் பெற்ற வாக்குகள் 2,962. இப்போது மசீச வேட்பாளரை ஆதரிக்கும் பாஸ் அந்த வாக்குகளில் பாதிக்குப் பாதியைத் தக்கவைத்துக் கொண்டு, அதனை தேசிய முன்னணி வசம் மடைமாற்றி விட்டாலே போதும். மசீசவின் வீ ஜெக் செங் கூடுதலாக 1,500 வாக்குளைப் பெறுவார்.

பாஸ் கட்சி இந்த முறை நிற்காததும் மசீசவின் வெற்றி வாய்ப்புகளை அற்புதமாகக் கூட்டியிருக்கிறது.

ஆக, போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு பாஸ் கட்சி மசீச வேட்பாளருக்கு ஆதரவு தருவது தேசிய முன்னணி இந்தத் தொகுதியை மீண்டும் கைப்பற்ற கிடைத்திருக்கும் மற்றொரு சிறந்த வாய்ப்பாகும்.

கெராக்கானின் வெண்டி சுப்பிரமணியம் வாக்குகளைப் பிரிப்பாரா?

மசீசவுக்கு இருக்கும் ஒரே சிக்கல் கெராக்கான் கட்சியின் வேட்பாளர் வெண்டி சுப்பிரமணியம். ஆனால், முன்பு தேசிய முன்னணியோடு இணைந்திருந்தபோதும் கெராக்கானுக்கு ஜோகூர் மாநிலத்தில் பெரிய அளவில் ஆதரவுக் களம் இருந்ததில்லை. கூட்டணிக் கட்சி என்ற முறையில் ஜோகூரில் ஓரிரண்டு தொகுதிகளைப் பெற்று கெராக்கான் எப்போதும் அந்த மாநிலத்தில் போட்டியிட்டு வந்துள்ளது.

தஞ்சோங் பியாய் தொகுதியில் அது முதன் முறையாகப் போட்டியிடுவதால், அங்கு எவ்வளவு வாக்குகள் பெறும், அங்கு அந்தக் கட்சிக்கான ஆதரவு அலை எந்த அளவுக்கு இருக்கும் என்பதெல்லாம் – இப்போதைக்குக் கணிக்க முடியாத – தேர்தல் முடிவுகளைப் பார்த்த பிறகே – நாம் கூறக் கூடிய அம்சம்.

கெராக்கான் வேட்பாளர் ‘வெண்டி சுப்பிரமணியம்’ என்று பெயர் வைத்திருப்பதாலேயே – ‘சுப்பிரமணியம்’ – என்ற பெயரைப் பார்த்து இந்திய வாக்காளர்கள் இவருக்கு வாக்களித்து விடுவார்கள் என்று கூறமுடியாது.

காரணம், இங்குள்ள இந்திய வாக்காளர்களே மொத்தம் 500-க்கும் குறைவானவர்கள்தான். அவர்களில் 70 விழுக்காட்டினர் வாக்களிக்க வந்தாலே மொத்தம் விழப்போவது சுமார் 350 வாக்குகள்தான். இந்த 350 வாக்குகளும் மஇகா-தேசிய முன்னணி என்றும் நம்பிக்கைக் கூட்டணி என்றும் பிரியுமே தவிர – ஒட்டு மொத்தமாக ஒரு தரப்புக்கு இந்தியர் வாக்குகள் விழுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

அதிலும் விடுதலைப் புலிகள் கைது விவகாரத்தால் உச்சகட்ட அதிருப்தியில் இருக்கும் இந்திய சமூகம் நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களிக்காமல் தங்களின் எதிர்ப்பைக் காட்ட மீண்டும் மஇகா-தேசிய முன்னணிக்கே வாக்களிக்கும் என்ற கண்ணோட்டமும் இங்கே நிலவுகிறது.

அதிலும், நம்பிக்கைக் கூட்டணி அல்லது தேசிய முன்னணி என இரண்டு கூட்டணிகளில் ஒன்றுக்கு வாக்களித்து தாங்கள் சொல்ல வரும் சேதியை தஞ்சோங் பியாய் வாக்காளர்கள் சொல்ல முற்படுவார்களே அன்றி, கெராக்கானுக்கு வாக்களித்து தங்களின் வாக்குகளை பயனற்றதாக்க மாட்டார்கள் என்ற கருத்துதான் பொதுவாக நிலவுகிறது.

5,000 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி மீண்டும் வெல்ல முடியுமா?

2013 பொதுத் தேர்தலில் மசீச வேட்பாளரான இதே வீ ஜெக் செங் 5,457 வாக்குகள் பெரும்பான்மையில் இதே தஞ்சோங் பியாய் தொகுதியில் வெற்றி பெற்றார். 2008 பொதுத் தேர்தலிலோ வீ ஜெக் செங் 12,371 வாக்குகள் பெரும்பான்மையில் தஞ்சோங் பியாய் தொகுதியில் வெற்றி வாகை சூடினார்.

இந்த முறை மேற்கூறப்பட்ட அரசியல் சூழல்களை வைத்துப் பார்க்கும்போது மசீச-தேசிய முன்னணியின் வீ ஜெக் செங் கண்டிப்பாக இந்தத் தொகுதியை மீண்டும் வெல்வார் என்று கூறலாம்.

அதே சமயத்தில், பாஸ் கட்சியின் ஆதரவு, மாறியிருக்கும் சீன வாக்காளர்களின் மனநிலை – மலாய் வாக்காளர்கள் நம்பிக்கைக் கூட்டணி மீது கொண்டிருக்கும் அதிருப்தி – இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது –

வீ ஜெக் செங், 2013 தேர்தல் வெற்றியைப் போன்று ஏறத்தாழ 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் தஞ்சோங் பியாய் தொகுதியில் வெற்றி பெற்று, மசீசவின் இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்தில் காலடி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை!

-இரா.முத்தரசன்