கோலாலம்பூர்: பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவை, இனி எதிர்கால தேர்தல்களில் போட்டியிட தகுதியுடையவர் என்றும், 14-வது பொதுத் தேர்தலில் வேட்பாளராக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லுபடியாகாது என்றும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
“இப்போது அரசியலமைப்பு உரிமைகள் எனக்கு இருப்பதாக நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதால், தேர்தலில் போட்டியிடவும், சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றவும் இந்நாட்டில் ஒரு குடிமகனாக என்னை மறுக்கக்கூடாது.”
“எனவே இது மிக முக்கியமானது. தேர்தல் ஆணையம் போன்ற பொது நிறுவனங்கள் அரசியலமைப்பு மனப்பான்மைக்கு கட்டுப்பட வேண்டும். தனிநபர்களின் உரிமைகளை மறுக்கும் அரசியல் சக்திகளின் கருவிகளாக மாறக்கூடாது என்று நாம் நம்புகிறோம்” என்று தியான் சுவா கூறினார்.
கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி மரியானா யஹ்யா அவர்களால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில், தேர்தல் ஆணையம் தியான் சுவாவை வேட்பு நாளிலேயே பத்து நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக தகுதி நீக்கம் செய்தது.