Home நாடு மகாதீரின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏகப்பட்ட முரண்பாடுகள்

மகாதீரின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏகப்பட்ட முரண்பாடுகள்

1465
0
SHARE
Ad

(மலேசிய வெளியுறவுக் கொள்கைகள் எப்போதுமே அனைத்துலக அரங்கில் விவாதப் பொருளானதில்லை. ஆனால் அண்மையக் காலங்களில் மகாதீர் முன்னெடுத்திருக்கும் மலேசிய வெளியுறவுக் கொள்கைகள் முரண்பாடுகளின் மொத்த உருவமாக, அனைத்துலக நாடுகளின் பொதுவான போக்குகளுக்கு எதிர்மறையானவையாக அமைந்திருக்கின்றன என தனது பார்வையில் விவரிக்கின்றார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

துன் மகாதீரைத் தவிர்த்து மலேசியாவின் 6 பிரதமர்களின் வெளியுறவுக் கொள்கைகளைச் சற்று திரும்பிப் பார்த்தால் அவை யாவுமே மிதமான போக்கைக் கொண்டவையாகவே – சர்ச்சைகளின்றியே – இருந்து வந்திருக்கின்றன. எந்தக் காலத்திலும் மலேசியப் பிரதமர்களின் வெளியுறவுக் கொள்கைகள் சலசலப்பையோ, சச்சரவுகளையோ ஏற்படுத்தியதில்லை.

அதற்கு முக்கியக் காரணம் எந்த உள்நாட்டு விவகாரங்களிலும் அவர்கள் எப்போதுமே தலையிட்டதில்லை.

#TamilSchoolmychoice

பாலஸ்தீனப் பிரச்சனையில் மட்டும் மலேசியாவின் நிலைப்பாடு – மலேசியப் பிரதமர்களாக இருந்தவர்களின் நிலைப்பாடு – எப்போதும் ஒரே மாதிரிதான். இஸ்ரேலுடன் பேச்சு வார்த்தை இல்லை – தூதரக உறவுகள் இல்லை – பாலஸ்தீனத்திற்கு எல்லா வகையிலும் ஆதரவு – என்ற கடப்பாடுகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஆனால், எந்தப் பிரதமரும் இஸ்ரேல் அரசாங்கத்தின் போக்கைத்தான் சாடுவார்களே தவிர, யூதர்கள் என இனத்தின் மீதான தாக்குதல்களை மேற்கொண்டதில்லை, மகாதீரைத் தவிர!

மகாதீரின் முந்தைய 22 ஆண்டுகால ஆட்சியின் போது பல சமயங்களில் யூதர்களை இனரீதியாக கடுமையாகத் தாக்கி எழுதியிருக்கிறார் – பேசியிருக்கிறார்.

நேற்று (நவம்பர் 11) நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியக் கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்றியபோது கூட, பாலஸ்தீனத்தை அனைத்துலகம் அங்கீகரிக்காத காரணத்தால்தால் உலகம் எங்கும் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது என்ற பொருள்படும்படி கூறியிருக்கிறார், மகாதீர்.

கட்டுப்பாடுகளை எதிர்ப்பார் – ஆனால் அவரே கட்டுப்பாடுகளை விதிப்பார்

வணிகக் கட்டுப்பாடுகள், தடைகள், அனைத்துலக சட்டங்களுக்கு எதிரானவை என்று இப்போது கூறும் அதே மகாதீர்தான் பிரிட்டனின் பொருட்களைக் கடைசியாக வாங்குவோம் என்ற பிரச்சாரத்தைத் தனது ஆட்சிக் காலத்தில் தீவிரமாகப் பரப்பியவர்.

2018-இல் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் சில மாதங்கள் மலேசியாவின் உள்நாட்டுப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தியவர், இப்போது அனைத்துலக அரங்குகளில் தனது வெளியுறவுக் கொள்கைகளைப் பிரதிபலிக்கும் விதமாக பேசி வருகிறார். ஆனால், அதில் ஏகப்பட்ட முரண்பாடுகள்!

கால ஓட்டத்தில் இந்த முரண்பாடுகள் மலேசியாவுக்கு எதிராகத் திரும்பும்போது மலேசியாவுக்கே பாதிப்பாக அமையக் கூடிய அபாயமும் இருக்கிறது.

முரண்பாடு # 1 – காஷ்மீர் விவகாரத்தை ஐநா மன்றத்தில் எழுப்பினார்.

எப்போதுமே மற்ற மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற மலேசியாவின் கொள்கைக்கு நேர் எதிர்மாறாக இந்தியாவின் காஷ்மீர் பிரச்சனையை ஐநா மன்றத்தில் அண்மையில் உரையாற்றியபோது எழுப்பினார் மகாதீர்.

அந்தப் பிரச்சனையைப் பற்றி பேசுவதோடு நில்லாமல், காஷ்மீர் பிரச்சனை குறித்து இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் எனவும் மகாதீர் கூறியதுதான் அடுத்த அதிர்ச்சி. பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான பகைமையே காஷ்மீரத்தையும், அங்கிருந்து முளைக்கும் பயங்கரவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டது என்பதும் அவருக்குத் தெரியாததல்ல.

கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் பல முறை எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியா மீது கட்டவிழ்த்தபோதும், மௌனம் காத்த மலேசியா – அதைக் கண்டிக்காமல் – இப்போது மட்டும் இந்தியா, பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுவதும் ஒரு  முரண்பாடான வெளியுறவுக் கொள்கைதான்.

மேலும், ஏற்கனவே ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் கருத்து வேறுபாடு கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் மகாதீர் தலையிட்டது, இந்தியாவுக்கு கூடுதல் ஆத்திரத்தை ஏற்படுத்தி விட்டது என்று கூட கூறலாம்.

உதாரணத்திற்கு, நாளையே இந்திய அரசாங்கம், மலேசியாவின் 30 விழுக்காடு பூமிபுத்ரா கொள்கை நியாயமல்ல என்றோ, சபா, சரவாக் மாநிலங்களுக்கு முறையான அதிகாரப் பகிர்வு வழங்கப்படவில்லை – 1963 மலேசியா உடன்பாடு – முறையாகக் கடைப்பிடிக்கவில்லை என்றோ அறிக்கை ஒன்றை வெளியிட்டால், அதனால் நமது நாட்டில் எத்தகைய கூக்குரல்கள் எழும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

மலேசியா மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் – அவை மோசமான இனப் படுகொலைகளாக இருந்தாலும் – எப்போதும் தலையிட்டதில்லை என்பதற்கு சிறந்த உதாரணம், இலங்கைத் தமிழர்கள் இலட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டபோதும் மலேசிய அரசு மௌனம் காத்து நின்றது!

முரண்பாடு # 2 – ஜோ லோ – ஜாகிர் நாயக் தொடர்பான நடவடிக்கைகள்

இன்னொரு நாட்டில் ஒளிந்திருக்கும் ஜோ லோவை மலேசியாவுக்குள் மீண்டும் கொண்டுவர வேண்டும் என முயற்சிகள் எடுத்திருக்கிறது மலேசியா. ஜோ லோ ஒளிந்திருக்கும் நாட்டின் ஒத்துழைப்பு தராத போக்கை பகிரங்கமாக சாடுகிறார் காவல் துறைத் தலைவர் (ஐஜிபி).

ஜோ லோவுக்காக இன்னொரு நாட்டுடன் போர் தொடுக்க மாட்டோம், ஆனால் அவரைக் கொண்டுவர முயற்சிகள் எடுப்போம் என்கிறார் மகாதீர்.

அதே வேளையில் ஜாகிர் நாயக்கை இந்தியா கேட்டுக் கொண்டாலும் திருப்பி அனுப்பப் போவதில்லை எனக் கடிதம் அனுப்பப் போவதாக வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா அறிவித்திருக்கிறார்.

இன்னொரு நாட்டில் இருக்கும் ஜோ லோவை எங்களிடம் விசாரணைக்காக அனுப்ப வேண்டும், ஆனால் நாங்கள் மட்டும் ஜாகிரை விசாரணைக்காக இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறுவதைப் பார்த்தால்,

உங்களுக்கு வந்தால் இரத்தம் – மற்றவர்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னியா எனக் கேட்கத் தோன்றுகிறது.

ஜோ லோ – ஜாகிர் நாயக் குற்றங்களின் ஒப்பீடுகள்

சைபுடின் அப்துல்லா

ஜோ லோ மீது பணமோசடி குற்றம் மட்டுமே சாட்டப்பட்டிருக்கிறது. வேறு குற்றங்கள் எதுவும் இல்லை. எல்லாமே 1எம்டிபி சம்பந்தப்பட்டவை மட்டுமே. அமெரிக்கா, மலேசியா தவிர மற்ற நாடுகள் எதுவும் அவரைக் கோரவில்லை.

ஆனால், ஜாகிர் நாயக் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் நீளமானவை. பயங்கரவாதம்,  இன, மத ஒழிப்புப் பரப்புரைகள், பண மோசடி, கள்ளப் பணப் பரிமாற்றம் எனப் பல முனைகளில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

ஜோ லோவை மலேசியா, அமெரிக்கா மட்டுமே தேடுகின்றன. ஆனால், ஜாகிர் நாயக்கை வங்காளதேசம் உள்ளிட்ட பல நாடுகள் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கின்றன. இன்னும் சில நாடுகள் அவர் தங்களின் நாட்டில் நுழைவதற்கே தடைவிதித்திருக்கின்றன. முஸ்லீம் நாடுகளே அவருக்குத் தடைவிதித்திருக்கின்றன என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

காவல்துறைத் தலைவர் – பாடோர்

இந்தியாவுக்கு அனுப்பாமல் குறைந்த பட்சம் ஜாகிரை மூன்றாவது நாடு ஒன்றுக்கு அனுப்பும் நடுநிலை முடிவைக் கூட மலேசியா எடுப்பது பொருத்தமானதாக இருக்கும். ஆனால், ஊடகத் தகவல்களின்படி எந்த நாடும் ஜாகிரை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

ஆனால், இத்தனை மோசமான பின்னணிகளைக் கொண்ட ஜாகிர் நாயக்கைத் தற்காத்துக் கொண்டு – அவருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கி விட்டு – பகிரங்கமாக அவருக்கு காவல் துறை பாதுகாப்பும் தந்து – உள்நாட்டு அரசியல்வாதிகள், தலைவர்கள் மீது அவர் நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும் அளவுக்கு சுதந்திர சூழலை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு –  ஜோ லோவை மட்டும் அவரை வைத்திருக்கும் நாடு திருப்பி அனுப்ப வேண்டும் என்று தாண்டிக் குதிப்பது எந்த விதத்தில் நியாயம்?

மகாதீருக்கே வெளிச்சம்!

இன்னொரு கோணத்தில் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர் என இந்தியா குற்றம் சாட்டும் ஜாகிரை பாதுகாப்புடன் வைத்துக் கொண்டு, செயல்படாத விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத அமைப்போடு தொடர்பு கொண்டிருந்தார்கள் – துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தார்கள், விடுதலைப் புலிகள் சின்னங்களை வைத்திருந்தார்கள் என இதுவரையில் 12 பேர்களைக் கைது செய்து காவலில் வைத்திருப்பதும் மகாதீர் தலைமைத்துவத்தின் இன்னொரு முரண்பாடுதான். இத்தனைக்கும் இவர்கள் யாரும் பயங்கரவாதத்தை தூண்டும் விதத்தில் பேசவோ, செயல்படவோ இல்லை. கள்ளப் பணப் பரிமாற்றத்திலும் ஈடுபடவில்லை.

பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை அனுப்ப மாட்டோம் என்று கூறிக் கொண்டு, உள்நாட்டில் இன்னொரு வெளிநாட்டு பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களைக் கைது செய்வது எந்தவிதத்தில் நியாயம் என்பது மகாதீருக்கும், அயூப்கானுக்கும் (மலேசியக் காவல் துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர்) மட்டுமே தெரிந்த ஒன்று.

குற்றங்களை இன, மத அடிப்படையில் பார்க்கக் கூடாது

எப்படி பயங்கரவாதங்களை இனம், மதம் என்ற அடிப்படையில் பார்க்கக் கூடாதோ, அதே போன்று நாடு கடத்த கோரிக்கை விடுக்கப்படும் ஒரு குற்றவாளியையும் – அவர் தனது நாட்டில் செய்த குற்றங்களையும் – அவர் சீனர் என்றோ, இஸ்லாமியர் என்றோ பார்க்கக் கூடாது. அவர் பண மோசடி செய்தாரா, பயங்கரவாதத்தைத் தூண்டினாரா என்றெல்லாம் பிரித்துப் பார்க்கக் கூடாது. அனைத்துலகப் பார்வையில் குற்றம் என்றால் அதை அந்தக் கண்ணோட்டத்திலேயே பார்க்க வேண்டும்.

ஜோ லோ மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டியது நியாயம் என்றால், ஜாகிர் இந்தியா திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்பதும் நியாயம்தான்.

அப்படிச் செய்தால் ஒருவேளை உள்நாட்டில் விடுதலைப் புலிகள் விவகாரத்தில் நடத்தப்பட்ட கைது நடவடிக்கைகளுக்கும் நியாயம் கற்பிக்கலாம். மக்களும் ஏற்றுக் கொள்வார்கள்.

மலேசியா வந்தால் தனக்கு நீதி கிடைக்காது என்று வெளிநாட்டில் இருந்து கொண்டு புலம்புகிறார் ஜோ லோ.

அதையே மாற்றி, இந்தியா சென்றால் தனக்கு நீதி கிடைக்காது என்கிறார் ஜாகிர் நாயக்.

ஜாகிரின் அந்தக் குரலையே மகாதீரும் எதிரொலிக்கிறார்.

அயோத்தியா விவகாரமும் – ஜாகிர் நாயக் நிலைப்பாடும்…

சர்ச்சைக்குரிய பாபர் மசூதி

கடந்த வாரத்தில்தான் அயோத்தியா வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று பூர்வ தீர்ப்பு வழங்கப்பட்டது. சமூக ஊடங்களில் பல சமூக விரோதிகள் இனத் துவேஷக் கருத்துகளை பதிவிட்டாலும், இன்றுவரையில் ஓரிடத்தில் கூட இந்து-முஸ்லீம் மோதல்கள் இல்லை. ஒரு சொட்டு இரத்தம் கூட யாரும் சிந்தவில்லை.

மாறாக, அயோத்தியாவில் கட்டப்படவிருக்கும் இராமர் ஆலயத்திற்கு பொருளுதவியும், நன்கொடைகளும் வாரி வழங்குகிறோம் என்று முஸ்லீம் பெருமக்கள் பெருமனதுடன் முன்வந்து கொண்டிருக்கின்றனர்.

முஸ்லீம்களுக்கு வழங்கப்படவிருக்கும் 5 ஏக்கர் நிலத்தில், இந்தியாவிலேயே மிகப் பெரிய மசூதி கட்டப்பட வேண்டும் என்றும் அதற்குத் துணை நிற்போம் என்றும் இந்துத் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இராமஜென்ம பூமி ஆலயத்திற்கான அறவாரியக் குழுவில், அயோத்தியா வழக்கில் எதிர்தரப்பாக இருந்து வாதாடிய – இராம ஜென்ம பூமி தங்களுக்கே என்று வாதாடிய – முஸ்லீம் தரப்பு இயக்கங்களுக்கும் உரிய இடம் வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இந்தியாவில் மட்டுமின்றி, அனைத்துலக அளவிலும், சட்ட ரீதியான, நீதியான தீர்ப்பு என இந்திய உச்ச நீதிமன்றத்திற்குப் பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன. ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த குரலில் வழங்கியிருக்கும் தீர்ப்பை விசாரித்த ஐவரில் ஒருவர் இஸ்லாமியர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

அயோத்தியா விவகாரத்தில் இந்து – முஸ்லீம் மத நல்லிணக்கம் இந்தியா முழுமைக்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியா சென்றால் தனக்கு நியாயமான நீதி கிடைக்காது என்றும் ஜாகிர் நாயக் தொடர்ந்து சொல்வதை இன்னுமா நம்பிக் கொண்டிருக்கப் போகிறார்கள், மகாதீரும், மலேசிய அரசாங்கமும்?

-இரா.முத்தரசன்