கோலாலம்பூர்: மலேசியாவின் வான்வெளி பாதுகாப்பு மதிப்பீட்டைக் குறைத்ததன் விளைவாக, மலேசியாவிற்கு வருகைப் புரியும் வெளிநாட்டு பயணிகளின் வருகையை பாதிக்காது என்று கருதப்படுவதாக துணை நிதி அமைச்சர் டத்தோ அமிருடின் ஹம்சா தெரிவித்தார்.
முன்னதாக, அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எப்ஏஏ) மலேசியாவின் வான்வெளி பாதுகாப்பை வகை 2-க்கு தரமிறக்கியது.
மலேசியாவுக்கு வருகைப் புரியும் ஆண்டாக அறிவித்ததை அடுத்து, 30 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் இலக்கை மலேசியா எட்டும் என்று அவர் நம்புகிறார். வெளிநாட்டுசுற்றுலாப்பயணிகளின்வருகையைஊக்குவிப்பதற்காகபல்வேறுஅற்புதமானசுற்றுலாசலுகைகள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏன் மலேசியாவிற்கு வரமாட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. வெளிநாட்டு பயணிகள் மலேசியாவின் விமான சேவைகளை மட்டுமல்லாமல், பிற அனைத்துலக விமான நிறுவனங்களையும் பயன்படுத்துகிறார்கள்.” என்று அவர் தெரிவித்தார்.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, எப்ஏஏ மலேசியாவின் வான்வெளி பாதுகாப்பு மதிப்பீட்டைக் குறைத்ததோடு மட்டுமல்லாமல், மலேசிய விமானங்கள் அமெரிக்காவிற்கான பயணங்களைக் குறைக்கவும் வலியுறுத்தியுள்ளது.
எப்ஏஏயின் நடவடிக்கைகளுக்கான காரணங்களை அரசாங்கம் ஆராயும் என்றும், நியாயமான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அமிருடின் கூறினார்.