கோலாலம்பூர்: காவல்துறை தலைவர் உட்பட, மலேசிய காவல் துறையின் அனைத்து உறுப்பினர்களும் காவல் துறைப் புகார்கள் மற்றும் காவல் துறையினரின் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் அரசாங்க சார்பற்ற ஆணையத்தின் (ஐபிசிஎம்சி) பயன்பாடு அல்லது விசாரணையில் இருந்து விலக்கு பெற இயலாது.
காவல்துறைத் தலைவருக்கு எதிராக ஐபிசிஎம்சி பெற்ற முறைகேடு தொடர்பான அனைத்து புகார்களும் பிற காவல் அதிகாரிகளைப் போல், 24-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படும் என்று பிரதமர் துறை துணை அமைச்சர் முகமட் ஹனிபா மைடின் கூறினார்.
“ஐபிசிஎம்சி தனது விசாரணையை முடித்ததும், தவறான நடத்தை கண்டுபிடிக்கப்பட்டால், பொதுச்செயலாளரால் அமைக்கப்படவுள்ள ஒரு சிறப்பு ஒழுக்காற்று வாரியத்தை நிறுவுவதன் மூலம் காவல்துறைத் தலைவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம்” என்று அவர் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
காவல் துறையினரின் ஒருமைப்பாடு மற்றும் திறன்களை மேம்படுத்த ஐபிசிஎம்சியின் முதல் வரைவு கடந்த ஜூலை 18-ஆம் தேதியன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
புகார்களைப் பெறுவதற்கும் காவல் துறையினரின் முறைகேடு குறித்து விசாரணைகளை நடத்துவதற்கும் ஐபிசிஎம்சி ஒரு சுயாதீன கண்காணிப்புக் குழுவாக செயல்படும்.
எவ்வாறாயினும், இந்த மசோதா மீண்டும் மக்களவைக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னர் மேலதிக விவாதங்களுக்கு நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
டிசம்பர் மாதம் மக்களவைக் கூட்டம் முடிவடைவதற்கு முன்னர் இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ லீ வூ கியோங் தெரிவித்தார்.
இதற்கிடையில், இது குறித்து கருத்துரைத்த காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர், சட்டத்திற்கு முன்பு அனைவரும் பொதுவானவர்கள் என்றும், தம்மை விசாரிக்க விரும்பினால் அதற்கு தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.