கோலாலம்பூர்: அனைத்து உணவு வளாகங்களிலும் புகைப்பிடிப்பதை தடுக்கும் சட்ட அமலாக்க நடவடிக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி தொடங்குவதாக சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.
உணவு வளாகத்தில் புகைப்பிடிப்பதற்கான தடையை அமல்படுத்த கடுமையாக உழைத்து வருவதாக அவர் கூறினார்.
மொத்தம் 146,607 உணவு வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டு 31,422 எச்சரிக்கைக் கடிதங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“27,759 உணவுக் கடைகளுக்கு புகைப்பிடிக்கத் தடை எனும் அறிவிப்புப் பலகையை பார்வைக்கு வைக்க தவறியதற்காகவும், மேலும் உணவகங்களில் புகைப்பிடித்த 3,889 பேர்களுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
“ஜனவரி முதல் நவம்பர் 3 வரை மொத்தம் 23,805 புகார்கள் வந்துள்ளன” என்று நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை அவர் தெரிவித்தார்.
ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கி, புகைப்பிடித்தல் ஒவ்வொரு வளாகத்திலிருந்தும் மூன்று மீட்டர் அல்லது சுமார் 10 அடிக்கு வெளியே மட்டுமே அனுமதிக்கப்படும்.
தடைக்கு இணங்கத் தவறினால், புகைபிடிப்பவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். மேலும், 10,000 ரிங்கிட் வரை அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.