ஜகார்த்தா: ரிக்டர் அளவிலான 7.1 நிலநடுக்கம் இந்தோனிசியாவின் வடக்கு மாலுகு மற்றும் வடக்கு சுலவேசி தீவுகளை உலுக்கியது. இந்த சம்பவம் இந்தோனிசிய நேரப்படி அதிகாலை 1.17 மணிக்கு ஏற்பட்டதாக இந்தோனேசிய வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் (பிஎம்கேஜி) அமைப்பு தெரிவித்தது.
ஆரம்பத்தில் ரிக்டர் அளவில் 7.4 வாசிப்பைப் பதிவு செய்ததால், தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டது.
இருப்பினும், சுனாமி எச்சரிக்கை அதிகாலை 3.45 மணிக்கு (மலேசியா நேரம் அதிகாலை 2.45 மணிக்கு) மீண்டும் மீட்டுக் கொள்ளப்பட்டது.
ரிக்டர் அளவிலான 7.1 நிலநடுக்கம் வட ஜெயிலோ–மாலுகுவிலிருந்து வடமேற்கில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு ரிக்டர் அளவில் 5.9-க்கும் குறைவான 26 நிலநடுக்கங்கள் காலை 2.55 மணி வரை தொடர்ந்ததாக அவ்வமைப்பு தெரிவித்தது.
இந்த நிலநடுக்கம் டெர்னேட், மாலுகு, மெனாடோ மற்றும் பிடுங்கையும் உலுக்கியதால், அப்பகுதியில் வசிப்பவர்கள், வீட்டை விட்டு வெளியேறி, உயர்ந்த பகுதிக்கு நகர்ந்தனர்.
ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகம் அப்பகுதியில் உள்ள மலேசியர்களை அழைத்து, முன்னெச்சரிக்கையாக இருக்கவும், எப்போதும் அதிகாரிகளின் அறிவிப்புக்கு காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி சொத்து மற்றும் உயிர் சேதங்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று பெர்னாமா தெரிவித்துள்ளது.