கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் முன்னாள் அரசாங்க தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேலை பணிநீக்கம் செய்யவும், எந்த ஆவணங்களையும் அவர் தமது அலுவலகத்திலிருந்து வெளியே கொண்டு வர அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டதாக, முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் டான்ஸ்ரீ அலி ஹம்சா கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
நீதிபதி முகமட் ஜெய்னி மஸ்லான் முன்னிலையில் அரசு துணை வழக்கறிஞர் டத்தோஶ்ரீ கோபால் ஸ்ரீ ராமுக்கு பதிலளித்தபோது அலி இவ்வாறு கூறினார்.
கனியின் பணிநீக்கம் இரண்டு கட்டமாக செயல்படுத்தப்பட்டதாக அலி தெரிவித்துள்ளார். முதலில், மாமன்னருக்கு இந்த விவகாரம் குறித்து கடிதம் அனுப்பப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து நஜிப்பிடமிருந்து கனிக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“கடிதத்தில் கையெழுத்திட என்னை பிரதமர் வரவழைத்து அதை கனியிடம் கொடுத்து பணியிலிருந்து விலகுமாறு சொன்னார். எந்த ஆவணங்களையும் கனி அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்ல முடியாது என்றும் தெரிவிக்கச் சொன்னார்” என்று அவர் கூறினார்.
1எம்டிபியின் இறுதி கணக்கறிக்கையின் ஒரு பகுதியை நீக்குவதற்காக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஒரு சந்திப்புக் கூட்டத்திற்கு உத்தரவிட்டதாக அண்மையில் அலி கூறியிருந்தார். 1எம்டிபி இறுதி கணக்கறிக்கையில் ஒரு பகுதியை நீக்கும் கூட்டத்திற்கு நஜிப் உத்தரவிட்டதை அவர் உறுதிப்படுத்தினார். புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் துறையில் 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 22 முதல் 26 வரை இது செயல்படுத்தப்பட்டதாக நஜிப் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. நஜிப் குற்றவாளி எனில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 10,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.