கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (நவம்பர் 21) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட பறக்கும் வாகன சோதனைக்கு அனுமதியில்லை என்று விமானப் போக்குவரத்துத் துறை (சிஏஏஎம்) தெரிவித்துள்ளது.
இஎச்-216 எனப்படும் ஆளில்லா விமான சோதனை இன்று கோலாலம்பூர் மலேசிய பல்கலைக்கழக விமான தொழில்நுட்பத் தளத்தில் நடைபெறுவதாக கூறப்பட்டிருந்தது.
சிஏஏஎம் நேற்று புதன்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், சம்பந்தப்பட்ட சோதனை மையம் சுபாங் விமான நிலையத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளதாகவும், பயணிகள் விமான போக்குவரத்து மற்றும் ஹெலிகாப்டர் போக்குவரத்துக்கு உட்பட்டு, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்தது.
குவாங்சோவில் உள்ள ‘கிராண்ட் வேர்ல்ட் சயின்ஸ் பூங்காவில்‘ விமானங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ‘ஸ்டேட் ஆப் டிசைனில்‘ இருந்து மட்டுமே இஎச்-216 –க்கு சிறப்பு விமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே பகுதியில், கடந்த நவம்பர் 15-ஆம் தேதி இஎச்-216 சம்பந்தப்பட்ட விமான சோதனையையும் சிஏஏஎம் விசாரித்து வருவதாகக் கூறியுள்ளது.
“மலேசியாவில் விண்வெளித் துறையின் வளர்ச்சியை சிஏஏஎம் ஆதரிக்கிறது என்றாலும், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விமான சோதனைகள் சிஏஏஎம்மின் விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று அது குறிப்பிட்டுள்ளது.
இஎச்-216 சோதனை விமான விண்ணப்பத்தை பொருத்தமான பகுதியில் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.