சிட்னி – தற்போது முதன் முறையாக சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை சிங்கப்பூருக்குக் கடல் கடந்து ஏற்றுமதி செய்யும் திட்டத்தை ஆஸ்திரேலியாவின் இரண்டு மிகப் பெரிய வணிகப் பிரமுகர்கள் செயல்படுத்த முனைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் பல பொருட்கள் கப்பல் போக்குவரத்து மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சில நாடுகளில் எல்லை கடந்து தரைவழியாக மின்சாரம் விற்பனை செய்யப்படுகிறது அல்லது பகிர்ந்து கொள்ளப்படுகிறது. சிங்கப்பூரைப் பொறுத்தவரை அதன் பயன்பாட்டுக்கான தண்ணீர்கூட கடல் கடந்த மலேசியாவிலிருந்து இராட்சசக் குழாய்கள் மூலம் கட்டணம் செலுத்தி பெறப்படுகின்றது.
சிங்கப்பூரின் கட்டுமானத்திற்கான அடிப்படைப் பொருட்களான மணல் போன்ற பொருட்கள் கூட இந்தோனிசியாவில் இருந்து கடல் மார்க்கமாக சிறு கப்பல்கள் மூலம் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் அட்லாசியன் கொர்ப்பரேஷன் (Atlassian Corp) நிறுவனத்தின் இணை தோற்றுநர் மைக் கேன்னன் புரூக்ஸ் மற்றும் போர்ட்டிஸ்கியூ மெட்டல்ஸ் குழுமத்தின் தலைவர் அண்ட்ரூ போரெஸ்ட் ஆகிய இருவரும் இணைந்து சூரிய மின்சக்தியை சிங்கைக்கு ஏற்றுமதி செய்யும் பிரம்மாண்ட திட்டத்தில் கைகோர்க்க முன்வந்துள்ளனர். இவர்கள் இருவருமே ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள் ஆவர்.
மிகப் பிரம்மாண்டமான சூரிய மின்சக்தி உற்பத்தி ஆலை ஒன்றை நிறுவி, அதிலிருந்து பெறப்படும் சூரிய மின்சக்தியை சுமார் 4,500 கிலோமீட்டர் தூரத்திற்கான கடலடிக் கம்பிகள் மூலம் சிங்கைக்குக் கடத்திக் கொண்டு வரும் திட்டமாகும் இது.
மில்லியன் கணக்கான முதலீட்டைக் கொண்டுள்ள இந்தத் திட்டத்திற்காக 10 கிகாவாட் (gigawatt) சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யக் கூடிய ஆலை நிறுவப்படும். 1 கிகாவாட் மின்சாரம் என்பது 1 மில்லியன் கிலோவாட் அளவைக் கொண்டதாகும்.
இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், உலகின் ஏற்றுமதி வணிக அமைப்பே மாற்றியமைக்கப்படும் என்பதோடு, புதியதொரு ஏற்றுமதித் தொழிலை ஆஸ்திரேலியா உருவாக்கும் சூழலும் ஏற்படும்.
இந்தத் திட்டம் முழுமையாக வணிக ரீதியாகச் செயல்படுத்தப்பட்டால் 2027-இல் செயல்படத் தொடங்கும். ஏறத்தாழ 20 பில்லியன் ஆஸ்திரேலிய டாலரை இந்த பிரம்மாண்டத் திட்டம் முதலீடாகக் கொண்டிருக்கும்.
செயல்படுத்தப்படும்போது சிங்கப்பூரின் மின்சாரத் தேவைகளில் ஐந்தில் ஒரு பகுதியை இந்தத் திட்டம் மட்டுமே பூர்த்தி செய்யும்.