கோத்தா கினபாலு: மலேசியாவின் கடைசி சுமத்ரா பெண் காண்டாமிருகமான, ‘இமான்’ புற்றுநோய் காரணமாக கவலைக்கிடமாக உள்ளதாக சபா மாநில சுற்றுலா, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் துணை முதலமைச்சர் டத்தோ கிறிஸ்டினா லீவ் தெரிவித்தார்.
இமானுக்கு பசி ஏற்படுவதில்லை என்றும், அதன் எடை 476 கிலோவிலிருந்து, கடந்த சில ஆண்டுகளில் 44 கிலோவிற்கு குறைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இமானின் கருப்பையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாகவும், தற்போது அது சிக்கலாக வளர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் சில வாரங்களில் இமான் மரணம் அடையலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
“கால்நடை மருத்துவத் துறை அவ்வளர்ச்சியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முயற்சித்தது, ஆனால் அது ஏராளமான இரத்த இழப்பை ஏற்படுத்தும் என்பதால், கைவிடப்பட்டது” என்று அவர் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
கூடுதலாக, இந்தோனிசியாவில் 14 முதல் 18 வயது வரை பல ஆண் காண்டாமிருகங்கள் உள்ளன, அவற்றின் விந்தணுக்களை பாதுகாக்கப்பட்ட இமானின் முட்டையுடன் ஒன்று சேர்த்து இனப்பெருக்கம் செய்யப்படலாம் என்று அவர் கூறினார்.
முன்னதாக கடந்த மே மாதம் ‘டாம்’எனும் ஆண் காண்டாமிருகம், நோய் மற்றும் உட்புற உறுப்பு செயலிழப்பு காரணமாக மரணமுற்றது குறிப்பிடத்தக்கது.