கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியில் பாரம்பரியமாக இளைஞர் அணியின் ஆண்டுக் கூட்டத்தை தொடக்கி வைக்கும் பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலியின் பங்கு இம்முறையும் தொடரப்பட வேண்டும் என்று பிகேஆர் இளைஞர் அணியின் துணைத் தலைவர் முகமட் ஹில்மான் இட்ஹாம் தெரிவித்தார்.
“ஏஎம்கே மத்திய தேசிய காங்கிரஸ் பாரம்பரியமாக பிகேஆர் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி அவர்களின் முக்கிய உரையுடன் வருகிற டிசம்பர் 5-ஆம் தேதி எம்ஐடிசி மலாக்காவில் பிகேஆர் மகளிர் பிரிவுடன் இணைந்து தொடங்கும்.”
“தேசிய அளவிலான அனைத்து இளைஞர் அணி இயக்கங்களும், பிரதிநிதிகளும், கிளைகள் மரபுகளை நிலைநிறுத்த அணிதிரட்டப்படும்” என்று மூன்று மணி நேர சந்திப்புக்கு தலைமை தாங்கிய பின்னர் அவர் நேற்று புதன்கிழமை கூறினார்.
இருப்பினும், பிகேஆர் இளைஞர் தலைவர் அக்மால் நஸ்ருல்லா முகமட் நாசீர் மற்றும் அவரது மாநில இளைஞர் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை.
நேற்றிரவு நடந்த இளைஞர் கூட்டத்தில் கலந்து கொண்ட 196 இளைஞர் தலைவர்களில் 132 பேரின் ஆதரவை தனது குழு பெற்றதாக அஸ்மினின் அரசியல் செயலாளராக இருக்கும் ஹில்மான் தெரிவித்தார்.
“இன்றிரவு (நேற்று புதன்கிழமை) தேசிய மற்றும் கிளை மட்டங்களில் எங்கள் இளம் சகாக்களின் கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் கேட்க ஒரு கூட்டத்திற்கு நான் தலைமை தாங்கினேன். தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த 132 கிளை இளைஞர் தலைவர்கள் உள்ளனர்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக, இளைஞர் அணி தலைவர் அக்மால் நாசீர் அஸ்மினை அழைக்காததன் மூலம் பாரம்பரியத்தை மீறியதால் கட்சிக்குள் மோதல் வெடித்தது. அதற்கு பதிலாக டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட இருக்கும் இளைஞர் அணி கூட்டத்தை துணை பிரதமரும் பிகேஆர் ஆலோசகருமான வான் அசிசா வான் இஸ்மாயில் தொடக்கி வைப்பார் என்று கூறப்பட்டது.
இதனிடையே, ஹில்மானின் இந்த செயலைக் கண்டித்து அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று இளைஞர் அணி உதவித் தலைவர் தீபன் சுப்பிரமணியம் அழைப்பு விடுத்துள்ளார். பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி தனது அழைப்பு இரத்து செய்யப்பட்டிருந்ததைக் குறிப்பிட்டிருந்தாலும், நேற்றிரவு ஹில்மான், இளைஞர் பிரிவு மாநாட்டை அஸ்மின்தான் திறந்து வைப்பார் என்று வலியுறுத்தியதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.