கோலாலம்பூர்: அகால்புடி அறக்கட்டளையை நிறுவிய முன்னாள் துணை பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி, அறக்கட்டளையின் அறங்காவலர் மெஸ்ஸர் லூயிஸ் அண்ட் கோ நிறுவனத்திற்கு செலுத்த, அறக்கட்டளையின் நிரந்தர வைப்புக் கணக்கிலிருந்து 17,953,185.21 ரிங்கிட் பணத்தை மீட்டு, தனக்கே செலுத்தும்படி வங்கி அதிகாரியின் மூலம் அறிவுறுத்தியதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
அப்பின் வங்கியின் (ஜாலான் புனுஸ், கோலாலம்பூர் கிளை) செயல்பாட்டு அதிகாரி நரிமா மிஸ்வாடி (47) என்பவரிடம் இது குறித்து கேட்கப்பட்டபோது, அகமட் சாஹிட் ஹமீடி தம்மிடம் வங்கி வரைவோலை (பேங்க் டிராப்ட்) மூலம் அப்பணத்தை செலுத்தும்படி கூறியதாக அவர் கூறினார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதியன்று அகமட் சாஹிட்டுடனான ஒரு சந்திப்பின் போது, புத்ராஜெயாவில் உள்ள தனது அலுவலகத்தில், பேராக், பாகான் டத்தோக்கில் அகால்புடி அறக்கட்டளை கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக அப்பணம் உபயோகிக்கப்படும் என்று தம்மிடம் கூறியதாக நரிமா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மெஸ்ஸர் லூயிஸ் அண்ட் கோ நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதற்கு வங்கி வரைவோலையைப் பயன்படுத்த அறக்கட்டளைக்காக, வங்கியின் தலைமையகத்திடம் நரிமா ஒப்புதல் கோரியிருந்ததாகவும், மேலும் ஜூன் 23-ஆம் தேதியன்று, அறக்கட்டளையிலிருந்து ஒரு கடிதத்தை ஜாலான் புனுஸ் கிளை காசாளருக்குக் கொடுத்ததாகவும் தெரிவித்தார். அதன் பிறகு, வங்கி வரைவோலை வெளியிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அகால்புடி அறக்கட்டளை நிதி சம்பந்தப்பட்ட மில்லியன் கணக்கான ரிங்கிட் சம்பந்தப்பட்ட குற்றவியல் நம்பிக்கை மீறல், கையூட்டு மற்றும் பணமோசடி உள்ளிட்ட 47 குற்றச்சாட்டுகளை அகமட் சாஹிட் ஹமீடி எதிர்கொள்கிறார். நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்குவேரா முன் விசாரணை இன்று வியாழக்கிழமை தொடர்கிறது.