எதிர்பாராத திருப்பமாக இன்று சனிக்கிழமை காலை பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் (படம்) மீண்டும் மாநில முதல்வராக மாநில ஆளுநரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
சரத்பவாரின் தேசிய வாதக் காங்கிரஸ் பாஜகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, இந்தப் புதிய ஆட்சி மாற்றம் சாத்தியமாகியுள்ளது.
மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக 105 சட்டமன்றங்களையும், தேசியவாதக் காங்கிரஸ் 54 இடங்களையும் கொண்டிருப்பதால் அந்த இரண்டு கட்சிகளும் இணைந்து 159 இடங்களுடன் பெரும்பான்மை ஆட்சியை அமைக்கின்றன.
அண்மையில் சரத்பவார் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்ததன் விளைவாக இந்தப் புதிய கூட்டணி ஏற்பட்டுள்ளதாகவும், பாஜக தலைவர் அமித் ஷாவின் வியூகத் திறனுக்கு மற்றொரு சான்றாகவும் மகராஷ்டிரா மாநில அரசியல் திருப்பம் நிகழ்ந்திருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்ற வேளையில், துணை முதல்வராக தேசியவாதக் காங்கிரசின் அஜித் பவார் பதவியேற்றார். அஜித் பவார், சரத்பவாரின் அண்ணன் மகனாவார்.