புது டில்லி: பாஜக தலைமையிலான மகாராஷ்டிரா அரசாங்கத்தின் வலிமையை தீர்மானிக்க உச்சநீதிமன்றம் நாளை புதன்கிழமை (நவம்பர் 27) ஒரு சோதனைக்கு உத்தரவிட்டுள்ளது.
அதாவது, இரு தரப்புகளும் தங்களுக்கு அதிக பெரும்பான்மை இருப்பதாகக் கூறி வரும் நிலையில், நாளை மாலை 5 மணிக்குள் (இந்திய நேரப்படி) எத்தரப்பு அதிக பெரும்பான்மை கொண்டிருக்கிறது என்பதனை சோதனை செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், அது இரகசிய வாக்குப்பதிவாக இருக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) மற்றும் காங்கிரஸின் வெற்றியாக கருதப்படுகிறது.
கடந்த சனிக்கிழமையன்று, மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற செய்தி இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை எழுப்பியது.
தேவேந்திர பாட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றதோடு, என்சிபி தலைவர் அஜித் பவார் பாஜக தலைவரின் துணை முதலமைச்சராக சேர்ந்தது கிட்டத்தட்ட அனைவரையும் திகைக்க வைத்தது.