கோலாலம்பூர்: விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டு பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் (சொஸ்மா) கீழ் கைது செய்யப்பட்ட காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதனின் மனைவி அச்சுறுத்தல்கள் மற்றும் இலஞ்சம் கோருவது உள்ளிட்ட காவல் துறையினரின் மிரட்டல்களை எதிர்கொண்டதாகக் கூறியுள்ளார்.
தனது கணவரின் சுதந்திரத்திற்கு ஈடாக இலஞ்சம் கோரி ஒரு காவல் துறை அதிகாரியிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக வி. உமா தேவி கூறினார்.
தனது கணவரை தீபாவளிக்கு முன் விடுவிக்க முடியும் என்று காவல் துறை அதிகாரி அவரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. “பெலஞ்சா மக்கான்” என்று அவர் குறிப்பிட்டது இலஞ்சம் கோருவதை குறிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“இது எனது (உண்ணாவிரதத்தின்) மூன்றாம் நாள் இரவு 11 மணிக்கு தீபாவளிக்கு முன்பு நடந்தது. ஒரு தனியார் எண்ணிலிருந்து அழைப்பு வந்தபோது புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்திற்கு வெளியே அமர்ந்திருந்தேன்”
“புக்கிட் அமானுக்கு வெளியே நான் உட்கார்ந்திருப்பதைக் கண்காணிப்பதாக அந்த நபர் சொன்னார். என்னை அங்கிருந்து நகரரும்படி கேட்டார், ஆனால் நான் மறுத்துவிட்டேன், என் கணவர் தீபாவளிக்கு முன்பு விடுவிக்கப்படுவதைப் பார்க்க விரும்புகிறேன் என்று நான் கூறினேன்,” என்று நான்கு மாத கர்ப்பிணியான 31 வயதான உமா தேவி கூறினார்.
தனது கணவர் விடுதலைப் பெற விரும்பினால், அவர் இலஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும், அது சிறிய தொகையாக இருக்காது என்றும் அவர் கூறியதாக உமா கூறினார்.
“நான் எவ்வளவு தொகையை தயார் செய்ய முடியும் என்று யோசிக்க சொன்னார். 10 நிமிடங்களுக்குப் பிறகு என்னை திரும்ப அழைத்தார். ஆனால், என் கணவரை விடுவிக்க முடியும் என்று காவல்துறை அதிகாரி சொன்னபோது நான் நம்பவில்லை, ஏனெனில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டபோது அது எப்படி சாத்தியமாகும்?”
“அவர்களால் ஒருவரை விடுவிக்க முடியாது. இது நம்ப முடியாத வாக்குறுதியாகும், ”என்று அவர் நேற்று திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணையத்தின் (சுஹாகாம்) அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.