மலாக்கா: தற்போது செயல்படாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜி. சாமிநாதனை மாநில சட்டமன்றத்திலிருந்து காலி செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு மலாக்கா மாநில முதல்வர் அட்லி சஹாரி மறுப்பு தெரிவித்தார்.
1எம்டிபி ஊழலுடன் தொடர்புடைய, பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை முன்னுதாரணமாக குறிப்பிட்டு அட்லி தமது கருத்தினை தெரிவித்தார்.
“நாங்கள் பயங்கரவாதத்தை நிராகரிக்கிறோம். ஆனால் அதே நேரத்தில், இன்னும் குற்றவாளி என நிரூபிக்கப்படாதவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்,” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை மலாக்கா மாநில சட்டமன்றத்தில் கூறினார்.
“இது நாங்கள் ஆதரிக்கும் கொள்கைகளில் ஒன்றாகும். நாங்கள் குறிப்பிட்டுள்ளபடி, பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர், நஜிப் மீது குற்றம் சாட்டப்பட்டாலும், அவர் இன்னும் நாடாளுமன்ற உறுப்பினராகவே இருக்கிறார்,” என்று அவர் கூறினார்.
“எனவே, மக்கள் பிரதிநிதிகளை தங்கள் இடங்களை காலி செய்யும்படி கேட்கும்போது, நாமும் நம்மைப் பற்றி சிந்திக்க வேண்டும்” என்று அட்லி மேலும் கூறினார்.
விடுதலைப் புலிகள் உடனான தொடர்பு சம்பந்தமாக சமீபத்தில் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட 12 பேரில் சாமிநாதன் மற்றும் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரனும் அடங்குவர்.