Home கலை உலகம் ஆஸ்திரேலியா-மலேசியா இடையில் திரைப்படத் தயாரிப்பு ஒப்பந்தம்

ஆஸ்திரேலியா-மலேசியா இடையில் திரைப்படத் தயாரிப்பு ஒப்பந்தம்

760
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியத் திரைப்படத் துறைக்கு ஊக்கமளிக்கும் விதத்திலும், உள்நாட்டுத் திரைப்படத் தொழிலை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நகர்த்திச் செல்வதிலும் தீவிரமாகப் பாடுபட்டு வரும் தகவல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ முயற்சியில் ஆஸ்திரேலியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையில் திரைப்படத் தயாரிப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

மலேசியாவின் சார்பில் வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா ஆஸ்திரேலியா சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செனட்டர் மாரிஸ் பெய்ன் இருவரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த உடன்பாட்டின் மூலம் இனி மலேசியத் திரைப்படத் தயாரிப்புகள் ஆஸ்திரேலியாவின் சொந்த உள்நாட்டுத் தயாரிப்பு என்ற அங்கீகாரத்தைப் பெறும்.  இதன் மூலம் ஆஸ்திரேலியாவுடன் இத்தகைய உடன்பாடுகளைக் கொண்டிருக்கும் மற்ற நாடுகளின் சந்தைகளிலும் மலேசியத் திரைப்படங்கள் நுழைய முடியும்.

#TamilSchoolmychoice

இதுவரையில், கனடா, சீனா, சிங்கப்பூர்,இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆஸ்திரேலியாவுடன் இத்தகைய ஒப்பந்தங்களைக் கொண்டிருக்கின்றன.

இந்தப் புதிய ஒப்பந்தத்தின் மூலம் ஆஸ்திரேலியாவின் திரைப்பட வசதிகளையும், தொழில்நுட்பத் திறன்களையும் மலேசியா பகிர்ந்து கொள்ள முடியும். ஆஸ்திரேலியத் திரைப்படங்களுக்கான படப்பிடிப்புகள் மலேசியாவில் நடத்தப்படும் பட்சத்தில் அதன்மூலம் உள்நாட்டு திரைப்படத் தயாரிப்பு தொடர்புடைய வணிகங்களும் பலனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.