ஆனால், கண்ணதாசன் வாழ்ந்த தமிழ் நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு நாட்டில் அந்த மாபெரும் கவிஞனின் பெருமையையும், கவிதை ஆற்றலையும், இரசிகர்களாக இருந்து ஆண்டுதோறும் மறவாமல் மக்கள் கொண்டாடும் பெருமையும், பாரம்பரியமும் நமது மலேசியத் திருநாட்டுக்கு மட்டுமே உண்டு. வேறு எந்த நாட்டிலும் இதுபோன்று நடப்பதாகத் தகவல் இல்லை.
தலைநகரில் நடைபெறும் 32-வது கண்ணதாசன் ஆண்டு விழா இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கண்ணதாசன் அறவாரியக் குழுவினர் தொடங்கிய இந்தப் பாரம்பரியத்தை தனது அரசியல் பணிகளோடு தொடர்ந்து ஏற்று நடத்தி வருபவர் கண்ணதாசன் அறவாரியத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன்.
நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து தலைமையுரையாற்றிய சரவணன், கண்ணதாசன் பாடல்களோடு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், கண்ணதாசன் அறவாரியத்தின் மூலம் கண்ணதாசன் விழா நடத்துவதில் ஏற்பட்ட கடந்த கால அனுபவங்களையும் தனது உரையில் பகிர்ந்து கொண்டார்.
தமிழக உரையாளர்கள்
தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த சென்னை திரைப்பட சங்கத்தின் பொதுச் செயலாளரும் கண்ணதாசன் குடும்பத்தினரை நன்கு அறிந்தவருமான சுபாஷ் சந்திரன் கண்ணதாசன் வாழ்க்கையில் நடந்த பல சுவாரசிய சம்பவங்களை விவரித்தார்.
தொடர்ந்து தமிழக உரையாளர்கள் ச.பாரதி பாபு, கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா, வழக்கறிஞர் த.இராமலிங்கம், பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோரும் கண்ணதாசன் விழாவில் சிறப்புரை ஆற்றினர்.