கோலாலம்பூர்: எந்தவொரு பிகேஆர் உறுப்பினரும், பிகேஆர் தேசிய காங்கிரஸை நாசப்படுத்தவும் தனி கூட்டத்தில் கலந்து கொள்ளவும் முயன்றால் பதவி நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அதன் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
ஒற்றுமையை சீர்குலைப்பது மற்றும் கட்சிக்குள் நாசவேலை ஆகியவை மிகப்பெரிய தவறு என்று அவர் குறிப்பிட்டார்.
“இதுவரை அப்படி எதுவும் இல்லை (தனி காங்கிரஸ்). ஒரு சிறிய முயற்சி உள்ளது. கடந்த மூன்று நாட்களில் 83 விழுக்காடு பிரதிநிதிகள் மலாக்காவில் (தேசிய காங்கிரஸில்) கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளனர். 10 விழுக்காட்டினர் பேர் (ஒரு தனி மாநாட்டிற்கு) செல்வார்கள் என்பதை நான் நினைக்கிறேன்.”
“இதுபோன்ற எதுவும் இல்லை என்று நான் நம்புகிறேன். தற்போதுள்ள தலைவர்கள் (உறுப்பினர்கள்) எவரேனும் அவ்வாறு செய்தால் நீக்கப்படுவார்கள்” என்று அவர் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக, பிகேஆர் தேசிய காங்கிரஸ் மலாக்காவில் நடைபெறவுள்ள அதே நாளில், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தலைநகரில் உள்ள ஒரு தங்கும்விடுதியில் கூட்டத்தை நடத்தும் திட்டம் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.