ஏப்ரல் 8- பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் மீண்டும் பாராட்டு தெரிவித்துள்ளார். “அவர் மிகவும் நேர்மையானவர்” என்றும் கூறியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை மிகவும் உயர்ந்த தலைவர் என்று ஏற்கனவே பாராட்டு தெரிவித்திருந்தார். இப்போது அவர் மீண்டும் எல்.கே.அத்வானியை பாராட்டியுள்ளார்.
ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய முலாயம் சிங் கூறியதாவது:-
எல்.கே.அத்வானி மிகவும் நேர்மையான தலைவர். நாடு பிரிவினையை சந்தித்தபோது அவர் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது மிகவும் கடினமான வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார். எல்.கே.அத்வானியை நேர்மையானவர் என்று நான் கூறினால் மக்கள் கோபப்படுவார்கள்.
அவர் உண்மையானவர், நேர்மையானவர் தான். ஆனால் அவர் சார்ந்திருக்கும் கட்சி அவரை அவமரியாதை செய்கிறது. அவர் பாராட்டப்பட வேண்டும்.
ஜவஹர்லால் நேரு நாட்டின் பெரிய மனிதர் மோதிலால் நேருவின் மகன். நாட்டின் விடுதலைக்காக அவர் மிகவும் போராடியிருக்கிறார். அதன் பின்னரே அவர் நாட்டின் முதல் பிரதமராக ஆனார்.
இன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வெளியுறவு கொள்கை மிகவும் பலவீனமாக இருக்கிறது. சீனா-இந்தியா போரின்போது மற்ற நாடுகளுடன் சேர்ந்து அண்டை நாடான இலங்கையும் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தது. ஆனால் இப்போது அந்த நாடு நம்மை பிரிந்து சென்றுவிட்டது.
கிடங்குகளில் கோதுமையும், எலிகளும் நிறைந்து இருக்கிறது. அந்த கோதுமை எலிகளுக்கு உணவாகிறது. சர்க்கரையை சேமித்து வைக்க இடம் இல்லை. அனைத்து மட்டங்களிலும் உள்ள ஊழல் காரணமாக இந்த பொருட்கள் எல்லாம் சாதாரண மனிதர்களுக்கு கிடைப்பதில்லை.
மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு அதிகம் இருக்கிறது. அதனால் தான் அவர்கள் விரல் நுனியில் அரசுகளை மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு முலாயம் சிங் யாதவ் கூறினார்